
மான்டிரே பார்க்,: அமெரிக்காவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய நபர் தப்பியிருப்பதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 13 கிமீ தொலைவில் மான்டிரே பார்க் நகரம் அமைந்துள்ளது. 60 ஆயிரம் மக்கள் வசிக்கும் இந்நகரில் பெரும்பாலானவர்கள் ஆசியாவைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், சீனாவில் புத்தாண்டு நேற்று பிறந்ததையொட்டி, உலகெங்கிலும் உள்ள சீனர்கள் வெகுவிமரிசையாக புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். மான்டிரே பார்க் நகரிலும் பல இடங்களில் சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று முன்தினம் களைகட்டின.
இதற்காக அந்நகரில் ஆயிரக்கணக்கான சீனர்கள் குவிந்திருந்தனர்.இந்நிலையில், இரவு 10 மணி அளவில் திடீரென மர்ம நபர், பொது இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. நடன விடுதி ஒன்றில் இயந்திர துப்பாக்கியுடன் புகுந்த அந்த நபர் கண்மூடித்தனமாக சுட்டுள்ளான். இதைப் பார்த்த மக்கள் பலரும் அலறி அடித்தபடி உயிர் தப்பிக்க அருகிலிருந்த கடைகள் மற்றும் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். தகவலறிந்த போலீசார் துப்பாக்கி சூடு நடந்த இடத்திற்கு விரைந்தனர். இந்த சம்பவத்தில் பொதுமக்கள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் உறுதிபடுத்தி உள்ளனர்.
மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்தியவன் ஆண் என்பதை மட்டும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நபர் தப்பி விட்டதாகவும், அவனை தீவிரமாக தேடி வருவதாகவும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணம் உறுதி செய்யப்படவில்லை. பொது இடத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தப்பி ஓடிய சம்பவம் மான்டிரே பார்க் நகரில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.