
சென்னை: தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான (2022-23) பொதுத் தேர்வு கால அட்டவணை கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டது. அதன்படி, 12-ம்வகுப்புக்கு மார்ச் 13 முதல் ஏப்.3-ம்தேதி அனைவரையும், 11-ம் வகுப்புக்கு மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்.5-ம் தேதி வரை, 10-ம் வகுப்புக்கு ஏப்.6 முதல் 20-ம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதில் 11, 12-ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு அடுத்த மாதம் நடைபெறுகிறது.
பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் இறுதிப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வில் 9 லட்சத்து 38,067 பேர், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 7 லட்சத்து 87,783 பேர், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 51,482 பேர் என மொத்தம் 25 லட்சத்து 77,332 மாணவ, மாணவிகள் எழுதப்பட்டுள்ளனர். இதில் தமிழ் வழியில் 12 லட்சத்து 91,605 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறும்போது, ”பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. தற்போது மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் ஹால்டிக்கெட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.