
கர்நாடகா மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டத்தில் உள்ள நந்தி மலை அடிவாரத்தில் 112 அடி உயர ஆதியோகி சிலை திறந்து வைக்கப்பட்டது. மகர சங்கராந்தி நாளிலான நேற்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இந்த ஆதியோகி சிலையை திறந்து வைத்தார். சத்குருவின் ஈஷா யோக மையத்தின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் இந்த ஆதியோகி சிலை திறப்பு விழா நடைபெற்றது.
ஆதியோகி சிலை திறப்புக்கு முன்னதாக அங்கு யோகேஸ்வர லிங்கத்தை சத்குரு பிரதிஷ்டை செய்தார். தொடர்ந்து ஆதியோகி சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பரிமாறிய வரலாற்றை 3டி ஒளி, ஒலி காட்சியாக விவரிக்கும் கண்ணை கவரும் ‘ஆதியோகி திவ்ய தரிசனம்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சத்குருவின் மகள் ராதே ஜக்கியின் பரதநாட்டியம் நடன நிகழ்ச்சியும், கேரளாவின் தொன்மமான தேயம் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த விழாவில் முதலமைச்சர் பொம்மையுடன், சுகாதாரத்துறை அமைச்சர் கே சுதாகர், கல்வி அமைச்சர் பிசி நாகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆதியோகி சிலை திறக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
#பார்க்கவும் | கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, சிக்கபல்லாப்பூரில் 112 அடி உயர ‘ஆதியோகி சிவன்’ சிலையை சத்குரு ஜக்கி வாசுதேவ் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் முன்னிலையில் நேற்று திறந்து வைத்தார். pic.twitter.com/oz8fd36SZE
– ANI (@ANI) ஜனவரி 15, 2023
முதல் ஆதியோகி சிலை முதன் முதலில் 2017ஆம் ஆண்டு கோவையில் திறக்கப்பட்டது. பிரதமர் மோடி இதை திறந்து வைத்த நிலையில், உலகின் மிகப் பெரிய மார்பளவு சிலை என்ற கின்னஸ் சாதனையை இது பெற்றது. கடந்த 5 ஆண்டுகளில் முக்கிய சுற்றுலா மையமாக ஈஷா ஆதியோகி சிலை உருவெடுத்த நிலையில், அந்த சிலை போலவே கர்நாடகாவின் ஆதியோகி சிலை திறக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.