
மத்திய பட்ஜெட் 2023
பட்ஜெட் 2023க்கு முன்னதாக, விமானப் போக்குவரத்து அமைச்சகம் தனது சொத்துக்களைப் பணமாக்கும் முயற்சியில் சுமார் 20,000 கோடி ரூபாய் அளவிலான தொகையைத் திரட்ட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நிதியை திரட்டுதல்
அதாவது விமானப் போக்குவரத்து அமைச்சக கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்களைத் தனியாருக்கு விற்பனை செய்யவோ அல்லது குத்தகைக்கு அனுப்பவோ இந்த நிதியைத் திரட்ட உள்ளது மத்திய அரசு. ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் தான் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்து, பல விமான நிலையங்கள் நீண்ட கால அடிப்படையில் அதானி குழுமத்திற்கு அளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தனியார் முதலீடு
விமானப் போக்குவரத்துத் துறையில் தனியார் முதலீட்டாளர்கள் அதிக அளவில் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காக எவியேஷன் அமைச்சகம் முக்கியமான திட்டத்தைத் திட்டமிடுகிறது, வரவிருக்கும் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

12 சிறு நகர விமான நிலையங்கள்
தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் படி ராய்ப்பூர், ஜெய்ப்பூர், விஜயவாடா, கொல்கத்தா மற்றும் இந்தூர் உள்ளிட்ட 11 முதல் 12 சிறு நகர விமான நிலையங்கள் தனியாருக்கு நீண்ட கால அடிப்படையில் குத்தகைக்கு அளிக்கப்பட்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

8,000 கோடி ரூபாய்
இப்பட்டியலில் இருக்கும் 11 முதல் 12 சிறு நகர விமான நிலையங்களைத் தனியார்மயமாக்குவதன் மூலம் மத்திய அரசுக்கு சுமார் 8,000 கோடி ரூபாய் அளவிலான வருமானம் ஈட்ட முடியும் என ஏவியேஷன் அமைச்சகம் இலக்கு வைத்துள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி இந்த நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புக்குப் பின் ஒப்புதலுக்குக் குறிப்பு அனுப்பப்படும்.

டாடா
இந்தியாவில் நீண்ட காலத்திற்குப் பின்பு பயணிகள் மற்றும் விமானங்களின் அடிப்படையில் விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக டாடா 4 நிறுவனத்துடன் களத்தில் இறங்கிய பின்பு விமானப் பயணத் துறையில் பல மாற்றங்கள் நடந்துள்ளன.

கோவா, அருணாச்சலப் பிரதேசம்
இதோடு முக்கியமாகக் கோவா மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் புதிய விமான நிலையங்கள் திறக்கப்படுவதால், விமான நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு பயணிகள் அதிகரிப்பு மற்றும் விமானங்களுக்கான டிமாண்ட் இந்தியாவில் அதிகரித்துள்ளது.

200 செயல்பாட்டு விமான நிலையம்
இந்தியாவில் சுமார் 146 செயல்பாட்டுடன் இருக்கும் விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள் மற்றும் வாட்டர் ஏரோட்ரோம்கள் உள்ளன. மேலும் வரும் ஆண்டுகளில் குறைந்தது 200 செயல்பாட்டு விமான நிலையங்களை உருவாக்குவது மத்திய அரசாங்கத்தின் நோக்கமாகும். இதற்காகத் தற்போது இருக்கும் விமான நிலையங்களின் பயன்பாட்டையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தும் தனியார்மயமாக்கல் மிகவும் முக்கியமானது.