
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழகத்திலேயே முதல் முறையாக பசுமைத் திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார்.
திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன், பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியது: அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள், இயற்கை விவசாய முறையில் காய்கறி தோட்டம் அமைத்தல் உட்பட விவசாயத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்காக பசுமைப்பள்ளித் திட்டம் தொடங்கப்படுகிறது.
இதன் மூலம் சத்துணவுக்குத் தேவையான காய்கறிகளை இயற்கை முறையில், பள்ளி வளாகத்திலேயே பயிர் செய்து பயன்படுத்த முடியும். இந்தத் திட்டம் அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் 3,030 அரசுப் பள்ளிகளில் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன, இதுவரை 1,747 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.
இடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மாற்றாகபுதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகளை ஜன.27-ம் தேதிகேளம்பாக்கத்தில் முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார். இதற்காக முதல் கட்டமாக ரூ.240 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 15 லட்சம் மாணவ, மாணவிகள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அதே வேளையில், கடந்தாண்டு மட்டும் 1.88 லட்சம் பேர் பள்ளியில் இருந்து இடைநின்றுள்ளனர்.
இவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும்,பள்ளியில் இருந்து இடைநின்று விடும் மன நிலையில் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து, அவர்கள் தொடர்ந்து பயிலும் கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, கொரடாச்சேரி அரசு பெண்கள் பள்ளியில் பசுமைப் பள்ளித் திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.