
மும்பை: இந்திய நாட்டில் பங்கேற்று விளையாடிய முதல்தர கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார் புஜாரா. இதன் மூலம் இந்த சாதனையை எட்டும் இரண்டாவது இந்திய பேட்ஸ்மேனாகி உள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவர் புஜாரா. டெஸ்ட் அணியில் ரெகுலர் பேட்ஸ்மேனாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 7014 ரன்கள் குவித்துள்ளார். இதில் 19 சதங்கள் மற்றும் 34 அரை சதங்கள் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது பேட்டிங் சராசரி 44.39.
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பை தொடரில் சவுராஷ்டிரா அணிக்காக இவர் விளையாடி வருகிறார். வெள்ளி அன்று ஆந்திர அணிக்கு எதிரான போட்டியில் 12,000 ரன்களை அவர் நிறைவு செய்தார். இதன் மூலம் சொந்த மண்ணில் முதல்தர கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடந்த 2-வது இந்திய வீரர் ஆனார். முதலிடத்தில் 14,609 ரன்களுடன் வாசிம் ஜாபர் உள்ளார்.
முதல்தர கிரிக்கெட்டில் மொத்தம் 56 சதங்களை புஜாரா பதிவு செய்துள்ளார். இதில் 36 சதங்கள் இந்தியாவில் பதிவு செய்தவை.
ஆஸ்திரேலிய அணி உடனான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அவர் தமிழ்நாடு அணியுடன் நடைபெறும் ரஞ்சி போட்டியில் விளையாட உள்ளார். ஆசி.க்கு எதிராக 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1893 ரன்கள் குவித்துள்ளார். அந்த அணிக்கு எதிராக அவரது பேட்டிங் சராசரி 54.08.