
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 6 மாத கர்ப்பிணி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொச்சி சேராநல்லூர் பகுதியில் உள்ள ஓட்டல்களில் போதைப் பொருள் விற்பனை நடப்பதாக சேராநல்லூர் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் ஒரு கர்ப்பிணிஉள்பட 3 பேர் தங்கியிருந்தனர். அவர்களிடம் விசாரித்தனர். அப்போது அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சை வந்துள்ளதாக பெண்ணின் கணவர் கூறியுள்ளார். அதை நம்பி போலீசார் திரும்பி சென்றனர். ஆனால் சந்தேகத்தின் பேரில் போலீசார் மீண்டும் அந்த அறைக்கு சென்று பரிசோதனை செய்தனர். அதில் அவர்களிடமிருந்து எம்டிஎம்ஏ, கஞ்சா, ஹாசிஷ், எல்எஸ்டி ஸ்டாம்ப், நைட்ரோஸ்பாம் மாத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கொச்சியை சேர்ந்த சனூப் (29), அவரது மனைவி அபர்ணா (26) மற்றும் நவுபல் (28) என்பது தெரியவந்தது. அபர்ணா 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். அபர்ணா மற்றும் சனூப் மீது ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக பல வழக்குகள் உள்ளன. இவர்கள் 2 பேரும் சிகிச்சைக்கு வந்ததாக கூறி இதுபோல ஓட்டல்களில் தங்கி போதைப் பொருள் விற்பனை செய்து வந்தனர். நவுபல் டாக்ஸி டிரைவராக உள்ளார். 3 பேரையும் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.