
மாருதி சுசூகி
டிசம்பர் 31 உடன் முடிந்த காலாண்டில் மாருதி சுசூகி ஒருங்கிணைந்த மொத்த லாபமாகச் சுமார் 2,391.5 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டின் 1,041.8 கோடி ரூபாய் அளவீட்டை ஒப்பிடுகையில் 129.55 சதவீதம் அதிகமாகும்.

வருவாய்
இதேபோல் மாருதி சுசூகி நிறுவனத்தின் வருவாய் இக்காலாண்டில் 24.96 சதவீதம் அதிகரித்து 23,253.3 கோடி ரூபாயில் இருந்து 29,057.5 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. லாபத்தில் 130 சதவீத லாபத்தைப் பதிவு செய்த மாருதி சுசூகி வருவாயில் வெறும் 25 சதவீத வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளார். லாப உயர்வுக்கு என்ன வித்தியாசம் தெரியுமா..?

காரணம்
மாருதி சுசூகி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்ததால் அதன் கார்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது, ஆனால் இந்த டிசம்பர் காலாண்டில் பல உற்பத்தி பொருட்களின் விலை குறைந்துள்ளது.

லாபத்தில் 130% உயர்வு
இந்த வித்தியாசம் தான் தற்போது லாபத்தில் 130 சதவீதம் வரை வர முக்கிய காரணம், இதேவேளையில் டிசம்பர் காலாண்டில் பண்டிகை காலத்தில் அதிக விலை தள்ளுபடி அறிவிக்கப்பட்டதால் கார் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் லாபம் பெரிய அளவில் மேம்பட்டது.

EBIT மார்ஜின்
டிசம்பர் காலாண்டில் EBIT மார்ஜின் அளவு கடந்த ஆண்டை காட்டிலும் 350 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 7.6 சதவீதமாகவும், லாப வரம்பு அளவு 380 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 8.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

விற்பனை
இந்த டிசம்பர் 2022 காலாண்டில் மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை அளவு 8.2 சதவீதம் அதிகரித்து மொத்தம் 4,65,911 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு சந்தையில் 4,03,929 கார்களும், ஏற்றுமதி மூலம் வெளிநாட்டுச் சந்தையில் 61,982 கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

வளர்ச்சி
மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை அளவை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் உள்நாட்டு விற்பனையில் 365,673 கார்களும், ஏற்றுமதி சந்தைகளில் 64,995 கார்களும் விற்பனை செய்யப்பட்டு மொத்தம் 430,668 கார்கள் விற்பனை செய்யப்பட்டன.

நிலுவையில் உள்ள ஆர்டர்கள்
இது மட்டும் அல்லாமல் மாருதி சுசூகி நிறுவனத்தில் டிசம்பர் காலாண்டு முடிவில் 3,63,000 கார்களுக்கான ஆர்டர்களை வைத்துள்ளது. இதில் 1,19,000 கார்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கார்களுக்கானது.