
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், 5ஜி சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த நான்கு மாதங்களில் 2 கோடியைத் தாண்டியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் போட்டி போட்டுக் கொண்டு 5ஜி சேவையை அறிமுகம் செய்து வருகிறது. இதுவரை, நாடு முழுவதும் 190 நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும், 5ஜி விரிவாக்கத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவைக் காட்டிலும் இந்தியா பின்தங்கியே காணப்படுகிறது. குறிப்பாக, 2022 நிலவரப்படி சீனாவில் 5ஜி மொபைல் சேவை 356 நகரங்களை ஆக்கிரமித்துள்ளது. அதேசமயம், அமெரிக்காவில் இந்த நகரங்களின் எண்ணிக்கை 296 ஆக உள்ளது.
அதேசமயம், பிலிப்பைன்ஸ் (95 நகரங்கள்), தென் கொரியா (85 நகரங்கள்) நாடுகளுடன் ஒப்பிடுகையில் 5ஜி சேவையில் இந்தியா முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 2024 மார்ச் மாதத்திற்குள் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் 10 முதல் 15 கோடி பேரை 5ஜி வளையத்துக்குள் கொண்டு வர இலக்கு நிர்ணயித்து அதற்கான திட்டங்களை வரையறுத்து துரித கதியில் செயலாக்கம் செய்யப்படுகிறது.
2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 5ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 37 கோடியை எட்டும் சர்வதேச தொழில்நுட்ப ஆய்வு நிறுவனமான ஓம்டியாவின் கனிப்பாக உள்ளது.