
ஹைதராபாத்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் பதிவு செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் இரட்டை சதம் விளாசியவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அதோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய 5-வது இந்தியராகி உள்ளார்.
ஹைதராபாத் நகரில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 149 பந்துகளில் 208 ரன்கள் குவித்தார். இதில் 19 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 139.60. இதன் மூலம் 23 ஆண்டுகள் 132 நாட்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் பதிவு செய்த இளம் வீரர் அவர் ஆகியுள்ளார். அதோடு ஒருநாள் கிரிக்கெட்டில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் ஒரு சாதனையையும் படைத்துள்ளார்.
மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் மிக குறைந்த இன்னிங்ஸில் (19 இன்னிங்ஸ்) 1000 ரன்களை கடந்த இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
மைல்ஸ்டோன் – இன்னிங்ஸ் அடிப்படையில் 1000 ODI ரன்களை அதிவேகமாக எடுத்த இந்தியர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றார் (19)
நேரலை – https://t.co/DXx5mqRguU #INDvNZ @mastercardindia pic.twitter.com/D3ckhBBPxn
— BCCI (@BCCI) ஜனவரி 18, 2023
ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் பதிவு செய்த இந்தியர்கள்
- சச்சின் டெண்டுல்கர் vs தென் ஆப்பிரிக்கா: 200 ரன்கள் – 2010
- சேவாக் vs மேற்கிந்திய தீவுகள்: 219 ரன்கள் – 2011
- ரோகித் சர்மா vs ஆஸ்திரேலியா: 209 ரன்கள் – 2013
- ரோகித் சர்மா vs இலங்கை: 264 ரன்கள் – 2014
- ரோகித் சர்மா vs இலங்கை: 208 ரன்கள் – 2017
- இஷான் கிஷன் vs வங்கதேசம்: 210 ரன்கள் – 2022
- சுப்மன் கில் vs நியூஸிலாந்து: 208 ரன்கள் – 2023