
சென்னை: தமிழ்நாட்டில் 2021 டிச.18 முதல் 2022 டிச.31 வரை 1,35,580 சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் மாவட்ட அளவிலான சுகாதார உயர் அலுவலர்களுக்கான கருத்தரங்கை தொடங்கி வைத்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கையேட்டினை வெளியிட்டார்.
இந்த கருத்தரங்கில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் மூலம் பல்வேறு செயல்பாடுகள் உலக வங்கியின் உதவியுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் 29.07.2019 தொடங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பீடு ரூ.2854.74 கோடி ஆகும். உலக வங்கி பங்களிப்பு ரூ.1998.32 கோடி (70%) மற்றும் தமிழ்நாடு அரசு பங்களிப்பு ரூ.856.42 கோடி (30%) ஆகும். உலக வங்கி இதுவரை ரூ.1219.08 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.
தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம், ஐநா அமைப்பின் பூர்த்தி செய்யப்படாத இலக்குகளான தொற்றா நோய்களை கட்டுப்படுத்துதல், அவசர கால சிகிச்சைகளை மேம்படுத்துதல், மனநல சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை 2030 ஆம் ஆண்டிற்குள் அடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு, குற்றப்பிரிவு பதிவேட்டின்படி, 55,713 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன, 17,544 பேர் படுகாயமும், 14,912 பேர் இறந்துள்ளனர். இதனைத் தடுக்கும் பொருட்டு, தமிழக முதல்வரால் “இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும்-48 திட்டம், மேல்மருவத்தூரில் 18.12.2021 அன்று தொடங்கப்பட்டது.
மேலும் 18.12.2021 முதல் 31.12.2022 வரை 1,35,580 சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைகளை மேம்படுத்துதல் 25 மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைத்துறை ரூ.10.97 கோடி செலவில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. முதுகலை மேற்படிப்பு (MD Emergency Medicine) 22 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 2022-23 கல்வியாண்டு 85 மாணவர்கள் பயந்து வருகின்றனர்.
தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் மற்றும் இந்திய தொழிற் நுட்ப கழகம் (ஐஐடி சென்னை) இணைந்து செயல்பாட்டு ஆராய்ச்சி என்ற முன்னோடியான ஆராய்ச்சி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. முதல் கட்டமாக 108 அவசர ஊர்தி சேவைகள், தமிழ்நாடு மற்றும் அவசர விபத்து சிகிச்சை முன்னெடுப்பு (TAEI) சேவைகள், உயிரியல் மருத்துவ கழிவுகள் மேலாண்மை, நோயாளிகளின் பாதுகாப்பு, அரசு மருத்துவமனைகளில் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளின் பயன்பாடு, பெண்களைப் பாதிக்கும் புற்று நோய்களைக் கண்டறிவதில் உள்ள காலதாமதம் முதலியவை ஆய்வு செய்யப்பட்டு, இக்கருத்தரங்கில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகளை மேம்படுத்தும் கொள்கை முடிவுகளை எடுக்க அத்தகைய ஆய்வின் முடிவுகள் உறுதுணையாக இருக்கும். மேலும் அரசு மருத்துவமனைகளில் உயிரியல் மருத்துவ கழிவுகள் மேலாண்மை, ஆற்றல் திறன் தணிக்கை, திரவ கழிவுகளின் மேலாண்மை, சுற்றுச் சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் “சுற்றுச் சூழல் நெறிமுறைகள்” குறித்து கையேடு இக்கருத்தரங்கில் வெளியிடப்பட்டுள்ளது” என்று அவர் பேசினார்.