
ஹைதராபாத்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள்கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தொடக்க ஆட்டக்காரர் பேட்ஸ்மேன் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசி அசத்தினார்.
ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 349 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான சுப்மன் கில் 145 பந்துகளில், 8 சிக்சர்கள், 19 பவுண்டரிகளுடன் இரட்டை சதம் விளாசிய அசத்தினார். பவுண்டரியும், சிக்ஸரும் பறக்கவிட்ட சுப்மன் கில் 149 பந்துகளில், 9 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் 208 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் ஆட்டமிழந்தார்.
208 ரன்கள் விளாசிய சுப்மன் கில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டைசதம் விளாசிய 8-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ரோஹித் சர்மா 34, சூர்யகுமார் யாதவ் 31, ஹர்திக் பாண்டியா 28 ரன்கள் சேர்த்தனர். விராட் கோலி 8, இஷான் கிஷன் 5, வாஷிங்டன் சுந்தர் 12, ஷர்துல் தாக்குர் 3 ரன்களில் நடையைக் கட்டினார்கள். நியூஸிலாந்து அணி தரப்பில் ஹென்றி சிப்லி, டேரில் மிட்செல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
350 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து 28.4 ஓவர்களில் 131 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. பின் ஆலன் 40, டேவன் கான்வே 10, ஹென்றி நிக்கோல்ஸ் 18, டேரில் மிட்செல் 9, கேப்டன் டாம் லேதம் 24, கிளென்பிலிப்ஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல்சாண்ட்னர் ஜோடி அதிரடியாக விளையாடி மிரட்டியது.
பிரேஸ்வெல், 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். சாண்ட்னர் 38 பந்தில் அரை சதம் கடந்தார். 162 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை மொகமது சிராஜ் பிரித்தார். அவரது பந்தில் மிட்செல் சாண்ட்னர் 57 ரன்னில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஹென்றி சிப்லியையும் (0) பெவிலியன் திருப்பினார் சிராஜ். கடைசி 4 ஓவரில் 56 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் பாண்டியா வீசிய 47-வது ஓவரில் 15 ரன்களும், ஷமியின் அடுத்த ஓவரில் 17 ரன்களும் விளாசப்பட்டன.
ஷர்துல் தாக்குர் வீசிய கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் முதல் பந்தை பிரேஸ்வெல் சிக்ஸருக்கு விளாசினார். அடுத்த பந்து வைத்தானது. இதற்கு மாற்றாக வீசப்பட்ட பந்தில் பிரேஸ்வெல் எல்பிடபிள்யூ ஆனார். முடிவில் நியூஸிலாந்து 49.2 ஓவர்களில் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிரேஸ்வெல் 78 பந்துகளில், 10 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 140 ரன்கள் சேர்த்தார்.
சிராஜ் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்தியஅணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் வரும் 21-ஆம் தேதி ராய்ப்பூரில் நடைபெறுகிறது.
விரைவான 1,000: நியூஸிலாந்துக்கு எதிரான ஹைதராபாத் போட்டியில் சுப்மன் கில் 106 ரன்களை எட்டிய போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விரைவாக ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர், 19 இன்னிங்ஸ்களில் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார். இதற்கு முன்னர் ஷிகர் தவண், விராட் கோலி ஆகியோர் தலா 24 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை எட்டினர். இந்த சாதனையை தற்போது சுப்மன் கில் முறியடித்துள்ளார்.
இளம்…: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த வயதில் இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சுப்மன் கில். அவர், 23 வயது 132 நாட்களில் இரட்டை சதத்தை அடித்துள்ளார். இந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் இஷான் கிஷன் 24 வயது 145 நாட்களில் இரட்டை சதம் விளாசியிருந்தார்.
சச்சினை முந்தினார்: ஹைதராபாத் மைதானத்தில் இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 2009-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 175 ரன்கள் குவித்ததே தனிநபரின் சிறந்த ரன்குவிப்பாக இருந்தது. இதை தற்போது 208 ரன்கள் விளாசி காலி செய்த சுப்மன் கில்.
4 நாட்களில் இரு சதம்… இலங்கை அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய சுப்மன் கில் தற்போது நியூஸிலாந்துக்கு எதிராக சதம் அடித்து அசத்தி உள்ளார்.
2,000: உலக அரங்கில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விரைவாக ஆயிரம் ரன்களை குவித்த வீரர்களில் பாகிஸ்தானின் இமாம் உல் ஹக்குடன் 2வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார் இந்தியாவின் ஷுப்மன் கில். இந்த வகை சாதனையில் பாகிஸ்தானின் பஹர் சமன் 18 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை சேர்த்து முதலிடத்தில் உள்ளார்.
அதிகபட்ச ரன்: நியூஸிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சுப்மன் கில் 208 ரன்கள் விளாசினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவரது அதிகபட்ச ரன்குவிப்பாக அமைந்தது. இதற்கு முன்னர் 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 130 ரன்கள் சேர்த்ததே ஷுப்மன் கில்லின் அதிகபட்ச ரன்களாக இருந்தது.
நியூஸி.க்கு எதிராக வேட்டை: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஷுப்மன் கில் (208 ரன்கள்). இதற்கு முன்னர் சச்சின் 186, மேத்யூ ஹைடன் 181 ரன்களை நியூஸிலாந்துக்கு எதிராக விளாசியிருந்தனர்.
தப்பித்த சுப்மன் கில்: சுப்மன் கில் 124 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை ஹென்றி சிப்லி தவறவிட்டார். இந்த வாய்ப்பை ஷுப்மன் கில் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
சர்ச்சையான பாண்டியா அவுட்..: ஹர்திக் பாண்டியா 28 ரன்களில் இருந்தபோது மிட்செல் சாண்ட்னர் வீசிய 40-வது ஓவரின் 4-வது பந்தில் போல்டானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பந்து விக்கெட் கீப்பர் டாம் லேதமின் கையுறை உரசியதன் காரணமாக ஸ்டெம்புகளின் மீது இருந்த பைல்ஸ் விழுவது டி.வி. ரீப்ளேவில் தெளிவாக தெரிந்தது. ஆனால் 3-வது நடுவர் பந்து உரசிதான் பைல்ஸ் விழுந்தது என முடிவு செய்து அவுட் கொடுத்துவிட்டார்.