
ரூபாய் 25 கோடி லாட்டரி சீட்டில் பரிசு கிடைத்த கேரளா இளைஞர் ஒருவர் தனக்கு நிம்மதியே இல்லாமல் போய்விட்டது என்று கூறி இருந்த நிலையில் தற்போது அவரது வாழ்க்கையில் திடீரென திருப்பம் ஏற்பட்டது.
கடந்த சட்ட மாதத்திற்கு முன்பு கேரளா லாட்டரியில் ரூ.25 கோடி பம்பர் பரிசை வென்றவர் அனுப் என்ற இளைஞர். இவருக்கு பரிசுத்தொகை கிடைத்ததை கேள்விப்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இவரது வீட்டிற்கு தினமும் வந்து பணம் கேட்டு தொல்லை செய்ததால் இவர் மன நிம்மதியை இழந்ததாகவும் சில நாட்கள் தலைமறைவாக இருந்ததாகவும் கூறியிருந்தார்.
தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத போது சொந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை என்றும் அந்த அளவுக்கு பந்தங்களால் தனக்கு தொல்லை ஏற்பட்டதாகவும் அவர் பேட்டியில் புலம்பி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது கடன் கேட்டு, உதவி கேட்டு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறியுள்ள அனுப், லாட்டரியால் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை லாட்டரியிலேயே முதலீடு செய்து இருக்கிறார். அதாவது எம் ஏ லக்கி சென்டர் என்ற லாட்டரி சீட்டு கடையை அவர் தொடங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
லாட்டரியில் கிடைத்த பணத்தில் பழைய வீடு ஒன்று வாங்கி புதுப்பித்து அதில் இருப்பதாகவும் இப்போதைக்கு லாட்டரி தவிர வேறு தொழில் எதையும் ஆலோசிக்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். லாட்டரியல் தான் எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது, எனவே லாட்டரி வியாபாரம் செய்யவே முடிவு செய்தேன் என்றும் அவர் கூறியுள்ளார்.