
இந்த மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்றதால், இந்திய அணி ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்று வருவது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, முதலில் களமிறங்கினால் 300+ ரன்கள் உறுதி என்ற நிலையில் பேட்டிங் செய்து, பலத்தை நிரூபித்து வருகிறது.
ஆகாஷ் சோப்ரா அதிருப்தி:
இந்நிலையில், இந்திய பிட்சுகள் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்த அவர், ”எதாவது ஒருபோட்டியில் 400 ரன்களுக்கு அருகில் சென்றால் பரவாயில்லை. ஆனால், கடந்த 6 ஒருநாள் போட்டிகளில், கௌகாதி, திருவனந்தபுரம், ஹைதராபாத், இந்தூர் என 4 இடங்களிலும் கிட்டதட்ட 400 ரன்களை நெருங்கிவிட்டனர். இது கிரிக்கெட்டிற்கு நல்லதே கிடையாது” எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், ”இதுபோன்ற பிட்ச்களில் ஒருநாள் போட்டி நடைபெற்றால் ரோஹித், சுப்மன் கில் இருவரிம் ஒருவர் நிச்சயம் பெரிய ஸ்கோர் அடிப்பார்கள். இந்த இருவரும் தவறவிட்டாலும், கோலி இருக்கிறார். 300+ ரன்களை அடிக்கும் அளவுக்கு பிட்ச்களை உருவாக்கி, வெற்றி பெற்றால் அது நன்றாகத்தான் இருக்கும். ஆனால், சுவாரசியம் குறைந்துவிடும். ஆம், இந்தியா முதலில் 400 ரன்கள் அடித்துவிட்டால், இந்தியா வெற்றிபெறும் என எல்லோருக்கும் தெரிந்துவிடும். பிறகு எப்படி பந்துவீசும்போது போட்டியை பார்ப்பார்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.
உண்மைதான்:
ஆகாஷ் சோப்ரா சொல்வதும் உண்மைதான். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிற்கும் சாதகமாக பிட்கள் இருந்தால்தான், போட்டி பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். பேட்டர்களுக்கு மட்டும் சாதகமாக அனைத்து பிட்சுகளும் இருந்தால், கிரிக்கெட் மீது ஆர்வம் மெல்ல குறைய வாய்ப்புள்ளது.
பாகிஸ்தானிலும் இப்படிதான், பிட்சுகள் பல பேட்டர்களுக்கு மட்டும்தான் சாதகமாக இருக்கும். இதனால், டெஸ்ட் போட்டிகள் பெரும்பாலும் டிராதான் ஆகும். இதன்காரணமாக, ராவல்பிண்டி போன்ற சில பிட்ச்களுக்கான ரேட்டிங்கை ஐசிசி குறைத்து வழங்கியுள்ளது. அப்படி குறைந்து வழங்கினால், சர்வதேச போட்டிகளை நடத்த அனுமதி கிடைக்காது. இந்தியாவிலும், அதேபோன்ற ஒரு நிலைமை வர வாய்ப்புள்ளது என ஆகாஷ் சோப்ரா போன்ற கிரிக்கெட் விமர்சகர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.