
பெய்ஜிங்: சீன மருத்துவமனைகளில் கடந்த ஒரு வாரத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 13,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க அறிவிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகள் கடந்த மாதம் தளர்த்தப்பட்டது. அப்போது முதல் கடந்த ஜனவரி 12-ம் தேதி வரை கரோனா பாதிப்பு காரணமாக சுமார் 60,000 பேர் மருத்துவமனைகளில் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு கூறியிருந்தது. ஆனால் இது சந்தேகிக்கும் வகையில் உள்ளதாக பல தரப்பினர் கூறுகின்றனர்.
சீனாவில் உள்ள மத்திய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜனவரி 13-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை மருத்துவமனைகளில் 681 பேர் கரோனா பாதிப்பு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். 11,977 பேர், கரோனா பாதிப்புடன் இதர நோய்கள் காரணமாக உயிரிழந்தனர் என தெரிவித்துள்ளது. இந்த உயிரிழப்பு பட்டியலில், வீட்டில் இருந்தபடி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை.
சீன புத்தாண்டு நேற்று கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, லட்சக்கணக்கான மக்கள் விடுமுறையில் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர். இதனால் சீனாவில் தினசரி கரோனா பாதிப்பு 36,000-மாக எட்டும் என ஏர்பினிட்டி என்ற தனியார் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதில் இருந்து தற்போது வரை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என அந்த அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.
ஆனால் சீன சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சீன மக்கள் தொகையில் சுமார் 80 சதவீதம் பேர் ஏற்கனவே கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதால், அடுத்த சில மாதங்களில், கரோனா 2-ம் அலை ஏற்படாது என்றார்.