
அகமதாபாத்: உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்திய தொழிலதிபரான கெளதம் அதானி சரிவை கண்டுள்ளார். தற்போது ‘ஃபோர்ப்ஸ்’ (Forbes) ரியல் டைம் உலக பணக்காரர்கள் பட்டியலில் அவர் மூன்றாவது இடத்தில் இருந்து ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பில் தொடர்ச்சியான சரிவு காரணமாக அவர் இந்தப் பின்னடைவை எதிர்கொண்டுள்ளார்.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் கெளதம் அதானி. 60 வயதான அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த சில ஆண்டுகளாக உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தற்போது பின்னடைவை எதிர்கொண்டுள்ளார். தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு 96.5 பில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 22.7 பில்லியன் டாலர்களை அவர் இழந்துள்ளார். அதாவது 19 சதவீதத்தை இழந்துள்ளார்.
அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் உள்ளது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து இரண்டு நாட்களில் அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.4.17 லட்சம் கோடி என சரிந்தது. மறுபக்கம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை ஆதாரமற்றது என்றும், தீங்கிழைக்கும் நோக்கில் வெளியிடப்படும் என்றும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஹிண்டன்பர்க் ரிசர்ச் “தங்கள் நிறுவனங்களின் பங்குமதிப்பு உயர்வைக் காட்டி அதானி குழும நிறுவனங்கள் மிக அதிக அளவில் கடன் பெற்றுள்ளன. மேலும், பங்குச் சந்தையில் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளன. அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்திருந்தார். இதன் எதிரொலியாக, அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.46,000 கோடி சரிந்தது.
இதன் தொடர்ச்சியாக, ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கை, “அதானி குழுமத்தின் மதிப்பை குலைக்கும் உள்நோக்கத்தில் ஆதாரமற்ற அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ளது. எங்கள் சரிவிலிருந்து ஹிண்டன்பர்க் ஆதாயமடைய முயற்சிக்கிறது. இந்தத் தவறான அறிக்கையால், அதானி குழுமத்தின் பங்குதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியப் பங்குச் சந்தையிலும் இந்த பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது கவலையளிக்கிறது. ஹிண்டன்பர்க் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளோம்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.