
புதுடெல்லி: அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருந்து, கடந்த நவம்பர் 26ம் தேதி, டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த சங்கர் மிஸ்ரா என்பவர் போதையில் அருகில் அமர்ந்து இருந்த பெண் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரிக்க விமானப் போக்குவரத்து இயக்குனரக (டிஜிசிஏ) விதிகளின் கீழ், ஏர் இந்தியா நிறுவனத்தின் 3 உறுப்பினர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு சங்கர் மிஸ்ரா ஏர் இந்தியா விமானத்தில் 4 மாதங்கள் தடை விதித்து உத்தரவிட்டது. பெங்களூருவில் இருந்த சங்கர் மிஸ்ராவை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த பிரச்னையை முறையாக கையாளவில்லை என கூறி, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு டிஜிசிஏ ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விமான பைலட்டின் லைசென்ஸ் 3 மாதம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை, விமானத்தில் பயணி சிறுநீர் கழித்ததை தெரிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதை ஏற்று கொள்கிறோம். அத்துமீறி நடந்து கொள்ளும் பயணிகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய கொள்கைகள் குறித்து ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.