
பாட்னா: பீகார் முதல்வருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவந்த முன்னாள் அமைச்சருக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம் நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஜகதானந்த் சிங்கின் மகனான எம்எல்ஏ சுதாகர் சிங், சமீப காலமாக முதல்வர் நிதிஷ் குமாருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்.
அவர் நிதிஷ் குமார் அமைச்சரவையில் விவசாய அமைச்சராக இருந்தபோது, அரசின் கொள்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பியதால் தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. அதன்பிறகும் நிதிஷ் குமாருக்கு எதிராக அவர் குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதில் ஓயவில்லை. சுதாகர் சிங்கின் மீது ஏற்கனவே ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முதன்மை பொதுச் செயலாளர் அப்துல் பாரி சித்திக், கட்சி விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், ’15 நாட்களில் உங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால், உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் கூட்டணி தர்மத்தை பின்பற்றவில்லை. மகா கூட்டணியில் உள்ள குறைகளை ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி ஆகியோர் மட்டுமே சுட்டிக் காட்டும் உரிமை உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.