
அப்போது அங்கு ஆறு மாத குழந்தை, தாய் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடந்ததை கண்டு போலீசாரே ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்ட போலீசார் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆறு மாத குழந்தையையும், அதனுடைய தாயையும் ஒரு கும்பல் தலையில் சுட்டுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், போதைப் பொருளுக்கு அடிமையான அல்லது கடத்தல் கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.
இந்த தாக்குதலில் இரண்டும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதும் போலீசார், இது தற்செயலான தாக்குதல் இல்லை என்றும், ஒரு குடும்பத்தை குறிவைத்து திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூடு நிகழ்ந்துள்ள வீட்டில் கடந்த வாரம் போதை பொருள் தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி இருந்த நிலையில், இன்று இதுபோன்றதொரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியரை சுட்ட மாணவன்: அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் ரிச்நெக் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் ஆறு வயது மாணவன் ஒருவன் வகுப்பறைக்குள் வைத்து 30 வயதான ஆசிரியை ஒருவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளான். கடந்த வாரம் நிகழ்ந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் ஆசிரியை பலத்த காயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், துப்பாக்கி தோட்டாக்களால் துளைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிரியையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததனர். அங்கு அவருக்கு உயிர் காக்கும் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவனை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒன்றாம் வகுப்பு அறைக்குள் நடந்த வாக்குவாதத்தையடுத்து, மாணவன் ஆசிரியையை சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் மாணவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என உறுதிபடுத்தியுள்ள போலீசார், தற்போது அந்த ஆசிரியையின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 44 ஆயிரம் பேர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் பள்ளிக்கூட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன. கடந்த மே மாதம் டெக்சாஸில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.