
நியூயார்க்: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் தோரோக்பர்ட் பகுதியில் இந்தியரான பீனல் படேல்(57) அவரது மனைவி ரூபல்பென் படேல், மகள் பக்டி படேல் ஆகியோருடன் வசித்த வந்தார். கடந்த 20ம் தேதி இவர்கள் மூவரும் வீட்டில் இருந்தபோது, முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பீனல் படேல் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் ரூபல்பென் படேல், பக்டி படேல் இருவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய 3 பேரும் வேறொரு நபருடன் தப்பி சென்று விட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என போலீசார் கூறினர். கடந்த ஞாயிற்றுகிழமை, 23 வயது அமெரிக்க வாழ் இந்திய இளைஞர் கொள்ளை கும்பலால் சுடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் இந்தியர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலால் இந்தியர்கள் பீதி அடைந்துள்ளனர்.