
அண்டிலியா
இந்தியாவிலேயே மிகவும் காஸ்ட்லியான வீடாக விளங்கும் முகேஷ் அம்பானி குடும்பம் வசிக்கும் ஆண்டிலியா வீட்டில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு மிகவும் முக்கியமான விருந்தினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இந்த நிச்சயதார்த்த விழா நடந்தது.

முகேஷ் அம்பானி – வீரேன் மெர்ச்சன்ட்
முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்-ன் மகளான ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் நிச்சயதார்த்த விழா தொடங்குவதற்கு முன் ஆண்டிலியா வீட்டில் இருக்கும் கிருஷ்ணர் கோவிலில் வணங்கி ஆசீர்வாதத்தைப் பெற்றனர்.

திருமண நிச்சய பத்திரிக்கை
இதைத் தொடர்ந்து கணபதி பூஜை செய்யப்பட்டு முகேஷ் அம்பானி குடும்பத்தின் பாரம்பரிய வழக்கத்தின் படி நிச்சயதார்த்த விழாவின் முக்கிய நிகழ்வான லகான் பத்ரிகா (திருமண நிச்சய பத்திரிக்கை) வாசிக்கப்பட்டது.

இரு வீட்டார்
திருமண நிச்சய பத்திரிக்கை என்பது இரு வீட்டார் முன்னிலையில் திருமணத்தை உறுதி செய்யும் ஒரு சடங்கு, இந்த விழாவில் திருமணப் பத்திரிக்கை போலவே இரு குடும்ப விபரங்களையும் எழுதி அனைவரின் முன்னிலையிலும் வாசிக்கப்பட்டது. இதன் மூலம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது உறுதி செய்யப்படும்.

ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிராமல்
அனந்த் அம்பானியின் சகோதரியும், ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் இயக்குநருமான ஈஷா அம்பானி மற்றும் அவரது கணவர் ஆனந்த் பிராமல் இணைந்து வீரேன் மெர்ச்சன்ட் வீட்டுக்குச் சென்று நிச்சயதார்த்த விழாவுக்கு முறையாக அழைத்தனர். இதன் பின்பு தான் அனைத்து நிகழ்வுகளும் நடந்தது.

அண்டிலியா வீடு
இந்த விழா காரணமாக முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா வீடு முழுவதும் பூக்கள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த விழாவில் முகேஷ் அம்பானி குடும்பத்தின் குஜராத் வழக்கின் படி கோல் தானா மற்றும் சுனாரி விதி சடங்குகளும் நடந்தது.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட்
இந்த நிகழ்ச்சியில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் ஆகியோர் மோதிரம் மாற்றிக்கொண்டது முக்கியமானதாகும். வழக்கம் போல் ஒட்டுமொத்த அம்பானி மற்றும் வீரன் மெர்ச்சன்ட் குடும்பம் ஆடம்பர ஆடைகள், நகைகள் என அசத்தினர்.

ஆனந்த் அம்பானி கல்வி, பதவி
ஆனந்த் அம்பானி அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியை முடித்தார் மற்றும் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கிரீன் எனர்ஜி வர்த்தகத்தை வழிநடத்துகிறார். மேலும் அவர் ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம்கள் போன்ற இணை நிறுவனங்களின் பல துணை நிறுவனங்களின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

ராதிகா மெர்ச்சன்ட் கல்வி, பதவி
என்கோர் ஹெல்த்கேர் சிஐஓ வீரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் மற்றும் மருந்து நிறுவனமான என்கோர் ஹெல்த்கேரின் வாரிய இயக்குநராக உள்ளார்.