
டிசம்பர் 10ம் தேதி இண்டிகோ விமானத்தில் சென்னையிலிருந்து திருச்சிக்குப் பயணம் செய்தபோது, விமானத்தின் அவசரகால கதவை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறந்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் அச்சம்பவம் குறித்து அப்போது தேஜஸ்வி யாதவ் மன்னிப்பு கடிதம் கொடுத்ததாகவும், அவருடன் பயணித்தது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து டிசம்பர் மாதம், தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது. தற்போது இதுகுறித்து விமான போக்குவரத் துறை அமைச்சகம், பாஜக எம்பிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாத இறுதியில், தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த 10ஆம் தேதி (டிசம்பர்) ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும்போது பொறுப்பேற்காமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவைத் திறந்து விளையாடியிருக்கிறார்கள். விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 10ஆம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பேற்காமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவைத் திறந்து விளையாடியுள்ளனர்.
விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனை (1/2)
— வி.செந்தில்பாலாஜி (@V_Senthilbalaji) டிசம்பர் 29, 2022
இதனால் விமானம் புறப்பட 2 மணி நேரம் தாமதம் ஆகியுள்ளது. மன்னிப்பு கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஊடகங்களில் இந்தச் செய்தி ஏன் வரவில்லை?” என்று பதிவிட்டிருந்தார். இது, பாஜக தலைவர் அண்ணாமலையைத்தான் அவர் மறைமுகமாக விமர்சித்தார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த ட்விட்டுக்கு அண்ணாமலை எந்த விளக்கமும் தரவில்லை. மேலும், செந்தில்பாலாஜி போட்டிருந்த ட்விட்டின் பின்னணியும் முழுமையாக செய்திகளில் வரவில்லை. இந்த நிலையில் இதுதொடர்பான செய்திகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
எமர்ஜென்சி கதவைத் திறந்த பாஜக எம்.பி.
அதன்படி மாநில அன்றைய தினம், கர்நாடகா பெங்களூரு தெற்கு மக்களவை தொகுதியின் பாஜக எம்பியான தேஜஸ்வி சூர்யா சென்னை விமான நிலையத்தில் அனுமதியின்றி விமானத்தின் அவசர வழியை திறந்ததாகக் கூறப்படுகிறது.
6E 7339 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. அந்த விமானம், சென்னையில் இருந்து திருச்சிக்கு அன்று காலை 10.05 புறப்பட தயாராக இருந்தது குறிப்பிடத்தக்கது. திருச்சியில் நடைபெற்ற அந்நிகழ்வில் பங்குகொண்டது குறித்து தேஜஸ்வி யாதவ் ட்விட்டரில் அப்போதே பதிவிட்டிருந்தார். இருப்பினும் விமானத்தில் நடந்தவை பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
திருச்சியில் நடைபெற்ற BJYM தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டத்தில் உரையாற்றினார்
இளம் அரசியல் ஆர்வலர்களின் திறனை வளர்ப்பதற்கு BJYM ஒரு சிறந்த தளமாகும்
மேலும் படிக்கவும், புதிய திறன்களைக் கற்கவும், அனைத்துப் பிரிவு இளைஞர்களையும், குறிப்பாக ஏழை எளிய மக்களைச் சென்றடையவும், பச்சாதாபத் தலைமையை வளர்க்கவும் காரியகர்த்தாக்களை வலியுறுத்தினார். pic.twitter.com/BB14Q4tWrK
— தேஜஸ்வி சூர்யா (@Tejasvi_Surya) டிசம்பர் 10, 2022
அவர் பயணம் செய்த விமான நிறுவனமான இண்டிகோ, எந்த அறிக்கையையும் வெளியிட மறுத்துவிட்டது. ஆனால், உடன் இருந்த பயணிகளின் குற்றச்சாட்டை தொடர்ந்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரக (டிஜிசிஏ) அதிகாரிகள் விமானத்தின் அவசர வழியை ஒரு பயணியை உறுதிப்படுத்தினர்.
டிசம்பர் 10 ஆம் தேதி, சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற IndiGo 6E விமானம் 6E-7339 இல் பயணி ஒருவர் அவசரகால கதவை திறந்தார். விரைவில் அழுத்தம் சரிபார்ப்புக்குப் பிறகு விமானம் புறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது: டிஜிசிஏ
– ANI (@ANI) ஜனவரி 17, 2023
உறுதிபடுத்திய பயணி
ஆனால் இதைச் செய்தது தேஜஸ்வி சூர்யாதான் என்பதை உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர். அதேநேரத்தில், அந்த விமானத்தில் பயணம் செய்த மற்றொரு பயணி, நேரில் பார்த்த சம்பவம் ஊடகத்தில் தெரியப்படுத்தி உள்ளார். விமானத்தில் எமர்ஜென்சி வழியை திறந்தது, தேஜஸ்வி சூர்யாதான் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “விமானப் பயண பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து பயணிகளுக்கு கேபின் குழுவினர் தெரிவித்துக் கொண்டிருந்தபோது, எமர்ஜென்சி கதவு அருகே அமர்ந்திருந்த தேஜஸ்வி சூர்யா, அந்த கைப்பிடியைப் பிடித்து இழுத்தார். அதனால் எமர்ஜென்சி கதவி திறக்கப்பட்டது. அதன் விளைவாக விமானத்தில் இருந்த அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டு பேருந்து ஒன்றில் அமரவைக்கப்பட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ”இதுதொடர்பாக தேஜஸ்வி மன்னிப்பு கேட்ட பிறகே, தொடர்ந்து அந்த விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவரது இருக்கை மாற்றப்பட்டது. அப்போது தேஜஸ்வியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடனிருந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்தகால சம்பவங்கள்
அக்டோபர் 20, 2015 தேதியிட்ட விமானப் பாதுகாப்பு தொடர்பான சிவில் விமானப் போக்குவரத்துத் தேவைகள் பிரிவு 5ல் அறிவிக்கப்பட்ட DGCA விதிகளின்படி, அனைத்து விமானங்களிலும் நேரும் சம்பவங்கள், விபத்துகள் குறித்து புகாரளிப்பது கட்டாயமாகும்.
ஆனால், இந்த விதிமீறல் குறித்து இண்டிகோ விமானம், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்திடம் (டிஜிசிஏ) தகவல் தெரிவித்ததா என்பது தெரியவில்லை. அதேநேரத்தில், கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்களுக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லிக்கு சென்ற கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் அவசரகால வழியைத் திறந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுபோல், 2017ஆம் ஆண்டுபிப்ரவரி மாதம் மும்பையிலிருந்து சண்டிகருக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்த ஒருவர், புறப்படுவதற்கு முன் விமானத்தின் அவசர வழியைத் திறந்து, சக பயணியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார். அடுத்து 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம், டெல்லியிலிருந்து வாரணாசிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணித்த ஒருவர், நடுவானில் அவசரகால வழியைத் திறக்க முயன்றபோது, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தற்போதைய ட்வீட்:
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது மற்றொரு ட்வீட்டை போட்டுள்ளார். அதில் அவர், “2 ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் அவசர கதவை திறந்து விளையாடியது டிச-29 அன்று நான் கேள்வியெழுப்பி இருந்தேன். இன்று DGCA விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்றென உருட்டிய பொய்யர், சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி” என்று குறிப்பிட்டுள்ளார்.
2 ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் அவசரக் கதவை திறந்து விளையாடியது டிச-29 அன்று நான் கேள்வியெழுப்பி இருந்தேன். இன்று DGCA விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்றென உருட்டிய பொய்யர், சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி. pic.twitter.com/yzWrd97dxs
— வி.செந்தில்பாலாஜி (@V_Senthilbalaji) ஜனவரி 17, 2023
இவ்விவகாரம் பற்றி அரசு தரப்பில் இண்டிகோ நிறுவனம் தரப்பில் இருந்து அண்ணாமலை மற்றும் தேஜஸ்வியின் பெயர்கள் குறித்து அதிகாரபூர்வமாக எந்த தகவலும் இன்று வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேஜஸ்வி யாதவ் இதுபற்றி கருத்து தெரிவிக்கவில்லை என்றபோதிலும், இச்சம்பவத்தை அவர் மறுக்கவில்லை. ஒருவேளை இண்டிகோ நிறுவனமோ, டிஜிசிஏ-வோ தன்னிடம் கேட்டால் கருத்து தெரிவிக்கிறேன் என அவர் கூறியிருக்கிறார். அண்ணாமலையும் இதுபற்றி கரு
ஆதாரம்: WWW.PUTHIYATHALAIMURAI.COM