
காரைக்கால்: திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நேற்று சனிப் பெயர்ச்சி என்பதால், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
காரைக்கால் அருகே திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையிலேயே விழாக்கள் நடத்தப்படுகின்றன.
அதன்படி, நிகழாண்டு டிசம்பர் (மார்கழி) மாதம்தான் சனிப் பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. ஆனால், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சியான நேற்று, சனீஸ்வர பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்தார்.
இதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் சென்றனர்.
அதிகாலை முதலே பக்தர்கள் நளன் குளத்துக்குச் சென்று புனித நீராடி, குளக்கரையில் உள்ள நளன் கலி தீர்த்த விநாயகர் கோயிலில் வழிபாடு செய்த பின்னர், தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சென்று நீண்ட வரிசையில் நின்று தர்பாரண்யேஸ்வரர், சனி பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் தரிசனம் செய்தனர்.
நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பிற்பகலில் கோயில் நடை சாத்தப்படவில்லை. கோயிலில் வழக்கமாக நடைபெறும் பூஜைகளே நடத்தப்பட்டன. சனிப் பெயர்ச்சிக்குரிய சிறப்பு பூஜைகள் எதுவும் நடத்தப்படவில்லை.
திருவாரூர் அருகே திருக்கொள்ளிக்காட்டில் உள்ள பொங்கு சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று, பொங்கு சனீஸ்வர பகவானுக்கு சந்தன அபிஷேகம், பாலாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.