
இந்தியாவில் வாகன கண்காட்சி 2 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். இதற்கு முன்பு கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்தது. ஆனால், கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டு நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கண்காட்சி வரும் 12ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை டெல்லி கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் நடக்கிறது. 12 மற்றும் 13ம் தேதிகளில் ஆட்டோமொபைல் வர்த்தகர்களுக்கும், 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை பொதுமக்களுக்கும் அனுமதி உள்ளது. மாருதி சுசூகி, ஹூண்டாய் மோட்டார் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர், கியா, எம்ஜி மோட்டார், பிஒய்டி ஆகிய புதிய மாடல் கார்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஹூண்டாய் கோனா பேஸ்லிப்ட்: இதில் குறிப்பாக, ஹூண்டாய் நிறுவனம் கோனா பேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்ய உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2019ல் கோனா என்ற பெயரில் முதலாவது எலக்ட்ரிக் காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்தது. 2020ல் இதன் மேம்படுதப்பட்ட மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகமானது. இந்த மாடல் ஆட்டோ டெல்லி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும் எனவும், விலை சுமார் ரூ.24 லட்சம் முதல் ரூ.26 லட்சத்துக்குள் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் அயோனிக்5: இதுபோல் ஹூண்டாய் அயோனிக் 5 என்ற எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்வதாக சமீபத்தில் அறிவித்தது. இதுவும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும் எனவும், இது 58 கிலோவாட் அவர் பேட்டரி மற்றும் 77.7 கிலோவாட் அவர் பேட்டரி என 2 தேர்வுகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் கிரேட்டா பேஸ்லிப்ட்: மிகவும் எதிர்பார்க்கப்பட்டகிரேட்டா பேஸ்லிப்ட் மாடலும் இந்த கண்காட்சியில் இடம்பெறலாம் என தெரிகிறது. இன்ஜினில் மாற்றம் இருக்காது . மேம்பட்ட தோற்றத்துடன் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது.
கியா கார்னிவால்: கியா கார்னிவால் பேஸ்லிப்ட் சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. இதுவும் ஆட்டோ கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.
கியா சொரெண்டோ: கியோ நிறுவனம், சொரெண்டோ 5வது தலைமுறை காரைக் காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தக் கார், 2.2 லிட்டர் டீசல் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை தவிர, பல்வேறு நிறுவனங்களின் கார்கள் இந்த கண்காட்சியில் இடம்பெறுகின்றன. 45 வாகன உற்பத்தி நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.