
புதுடெல்லி: கடந்த 2006 முதல் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையால், உருது மாணவர்கள் தொடர்ந்து பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இதை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு ஒரு சுமுகமான தீர்ப்பை ஏற்படுத்த முன்வருமா எனும் கேள்வி எழுந்துள்ளது.
ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியைப் போல், தமிழகத்தில் உருது மொழி வழியிலான கல்வியும் போதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தனியாக அரசு சார்பிலான உருது பள்ளிகள் சிறப்பாக வந்தன. ஆங்கிலேயர் காலம் முடிவிற்கு வந்த பின் படிப்படியாக படிப்படியாக மாற்றம் ஏற்பட்டது. இஸ்லாமிய மாணவர்களும் தங்கள் எதிர்காலம் கருதி, உருதுவிலிருந்து தமிழ் அல்லது ஆங்கில வழிக் கல்விக்கு மாறத் துவங்கினர்.
இதனால், உருது மொழி வாயிலாக அனைத்துப் பாடங்களும் என்ற நிலை மாறியது. இதன் தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உருது என்பது வெறும் ஒரு மொழிப் பாடமாக சுருங்கி விட்டது. இதுவும் சென்னை மற்றும் வட ஆற்காடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு அரசு உருது பள்ளிகளில் மட்டுமே தொடர்கின்றன. இச்சூழலில், கடந்த 2006-ஆம் ஆண்டு திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு அமலாக்கிய இருமொழிக் கொள்கையில் படிப்படியாக தமிழ் கட்டாயமானது.
இதையடுத்து, உருது பள்ளி மாணவர்களும் தமிழை ஒரு பாடமாகக் கற்கத் தொடங்கினர். இவர்களுக்கு 10-ஆம் வகுப்புக்கான இறுதித் தேர்வு எழுதும்போது 2014 முதல் பெரும் சிக்கல்கள் எழுந்தன. இரண்டு மொழிகளையும் பயிலும் இம்மாணவர்கள் தம் மொழிப் பாடத்திற்கான பிரிவின் தேர்வில் எந்த மொழியில் எழுதுவது என்பது பெரும் சிக்கலாக இருந்தது. தேர்விற்கு முந்தைய நாள் வரை நீட்டித்த சிக்கலுக்கு, மமகவின் ஆம்பூர் எம்எல்ஏவாக இருந்த அஸ்லம் பாஷா உள்ளிட்டோர் சாலை மறியல், போராட்டங்கள் என நடத்தி தீர்வு பெறும் நிலை உள்ளது.
கடைசியாக இவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கு 2019 முதல் 2022 வரை என தீர்வு கிடைத்தது. தற்காலிகமான இந்த தீர்ப்பில் கிடைத்த கால அவகாசம் மார்ச் 2022-ஆம் ஆண்டுடன் முடிவுற்றது. எனவே, நடப்பு கல்வியாண்டில் உருது மொழி பயிலும் மாணவர்களுக்கு மீண்டும் அந்தச் சிக்கல் கிளம்பியுள்ளது. இப்பிரச்சனை உருதுவிற்காக மட்டும் அன்றி, தமிழகத்தின் எல்லைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளின் மாணவர்களுக்கும் எழுந்துள்ளது.
இதில், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பயிலும் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மொழியைக் கற்றவர்களுக்கும் உருது மாணவர்களுக்கு எழுந்துள்ள சிக்கல். உருது போன்ற இடை மொழிகள் தேர்வின் மதிப்பெண்கள் தற்போது கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இதனால், அம்மொழிப் பாட வகுப்புகளை மாணவர்கள் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், மாணவர்கள் உருது வகுப்புகளில் கவனம் செலுத்துவதில்லை என்பது முக்கிய புகாராக உள்ளது. இதை தீர்க்க தமிழ் அல்லாத மொழியைக் கொண்ட மாணவர்கள் ஒரு கருத்தை முன் வைக்கின்றனர். இதில் தம் தாய்மொழியை அல்லது தமிழை கூடுதலான தேர்வாக எழுத வைக்கலாம் எனக் கூறுகின்றனர். 10 ஆம் வகுப்பில் தற்போது ஐந்து பாடப்பிரிவுகளில் மட்டும் மொத்தம் 500 மதிப்பெண்கள் உள்ளன.
இதை ஒரு பாடம் சேர்த்து 600 என தமிழ்நாடு அரசு மாற்ற வேண்டும் என்பதும் இதர மொழி மாணவர்களின் கருத்தாக உள்ளது. இப்பிரச்சினையை தீர்க்க தமிழ்நாடு அரசு முன்வருமா எனும் கேள்வியை அவர்கள் எழுப்பியுள்ளனர். மேலும், உருது உள்ளிட்ட இதர மொழிகளுக்கான அரசு பள்ளி ஆசிரியர்கள் அமர்த்தலிலும் இட ஒதுக்கீடு பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், அனைத்து ஒதுக்கீடுகளுக்கான சமூகத்திலும் இதர மொழி கற்ற தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பதில்லை.
இதன் தாக்கமாக, பல அரசு பள்ளிகளில் இதர மொழி ஆசிரியர்கள் ஓய்விற்கு பின் அவர்களுக்கான இடங்கள் நிரப்ப முடியாமல் உள்ளதாக தெரிகிறது. இதனால், ஆசிரியர்கள் இல்லை என அம்மொழி பாடத்தில் மாணவர்கள் சேராத நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம், மாணவர்கள் சேர்வதில்லை என அம்மொழிப் பாடங்களின் ஆசிரியர்களை பள்ளி நிர்வாகம் அமர்த்தாமல் தவிர்ப்பதும் ஏற்படுகின்றன. எனவே, இப்பிரச்சினையிலும் தமிழ்நாடு அரசு ஆலோசித்து ஒரு முடிவை எடுக்க வலியுறுத்தல் எழுந்துள்ளது.