
கிரிப்டோகரன்சி
உலகளவில் மிகவும் பிரபலமான அதிக மதிப்புடைய கிரிப்டோகரன்சியான பிட்காயின் 2022ல் மிகவும் மோசமான பாதிப்பை எதிர்கொண்ட நிலையில், 2023 ஆம் ஆண்டு துவக்கம் முதல் பெரும் மாற்றத்தையும் சந்தித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அனைவரும் மீண்டும் கிரிப்டோ சந்தையை நோக்கி பயணிக்க துவங்கியுள்ளனர்.

பிட்காயின்
கிரிப்டோகரன்சியின் அரசானை விளங்கும் பிட்காயின் ஜனவரி 1 அன்று ஆண்டின் குறைந்தபட்ச விலையான 16,496 டாலரில் இருந்து இன்றைய வர்த்தகம் வரையில் சுமார் 40.6 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆம் 21 நாளில் கிட்டதட்ட 41 சதவீத வளர்ச்சி. நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக உள்ளது.

ஜனவரி 1 முதல்
பிட்காயின் விலை ஜனவரி 1 ஆம் தேதி வெறும் 16500 டாலராக இருந்த நிலையில், இன்று அதிகப்படியாக 23,249.89 டாலர்கள் வரை உயர்ந்துள்ளது. இதனால் கிரிப்டோ முதலீட்டாளர்கள் படு குஷியாகியுள்ளனர். ஆனால் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இந்த 41 சதவீத உயர்வு என்பது பெரும் சரிவில் இருந்து சிறிய மேம்பாடு தான்

எதிரியம் விலை
உலகிலேயே மிகவும் நம்பிக்கையான கிரிப்டோ நெர்வொர்கில் முக்கியமானதாக விளங்கும் Ethereum blockchain நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட நாணயமான எதிரியம் சனிக்கிழமையன்று 0.58 சதவீதம் உயர்ந்து 1,668.1 டாலராக உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தை காட்டிலும் 9.7 டாலர்கள் அதிகரித்துள்ளது.

டாலர் மதிப்பு
பொதுவாக டாலர் மதிப்பு வீழ்ச்சி அடையும் போது, பொருளாதாரம் சரிவு பாதைக்கு போகும்போது முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை புதிய முதலீட்டு தளத்திற்கு மாற்றுவார்கள். இதில் எப்போதும் தங்கம் முதல் இடத்தில் இருந்தாலும் இன்றைய இளம் முதலீட்டாளர்கள், டெக் துறையில் அதிகம் முதலீடு செய்யும் அமைப்புகள் போன்றவை கிரிப்டோகரன்சிய முக்கிய ஆப்ஷனாக வைத்துள்ளது.

ஐஎம்எப் எச்சரிக்கை
இதன் அடிப்படையில் ஜனவரி மாதம் துவக்கத்திலேயே ஐஎம்எப் தலைவர் 2023 ஆம் ஆண்டு அமெரிக்கா, சீனா, ஐரோப்பா ரெசிஷனுக்குள் நுழைவது கட்டாயம் என தெரிவித்தார். இதை தொடர்ந்து முதலீட்டு சந்தையில் சில சலசலப்பு உருவானது. இதன் வாயிலாக கிரிப்டோ மீதான முதலீடுகள் அதிகரிக்க துவங்கியுள்ளது.

அமெரிக்காவின் நிலை
இந்த ரெசிஷனை உறுதி செய்யும் வகையில், அமெரிக்காவின் டிசம்பர் மாத சில்லறை விற்பனை ஒரு வருடத்தில் மிகக் குறைவான அளவீட்டை எட்டியுள்ளது. அதே சமயம் உற்பத்தி அளவுகள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

கடனுக்கான வட்டி
அவை அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் வர்த்தகம் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் மொத்த வர்த்தக அமைப்பும் பண்டிகை காலத்தில் கூட மந்த நிலையைத் தழுவியுள்ளது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெடரல் ரிசர்வ்
இந்த நிலையிலும் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அதிகாரிகள், அந்நாட்டின் பணவீக்கம் உச்சத்தில் இருப்பதற்கான அறிகுறிகளைக் காட்டும் வேலையில் பொருளாதாரச் செயல்பாடுகள் மந்தமடைந்து வருவதால், வட்டி விகிதங்கள் 5% க்கு மேல் உயர வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

பிட்காயின் டூ தங்கம்
இதற்கிடையில் தான் இன்று பிட்காயின் கிட்டத்தட்ட 10 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து இன்று அதிகப்படியாக 23,249.89 டாலர் வரை உயர முக்கிய காரணமாக அமைந்தது. இதே காரணத்திற்காக தான் தங்கம் விலையும் வெள்ளிக்கிழமை இந்திய சந்தையில் புதிய உச்சத்தை தொட்டது.