
பெங்களூரு: பாஜக அரசாங்கத்தின் நோக்கம் வாக்கு வங்கி அரசியல் அல்ல; வளர்ச்சி என கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் யாத்கிரி மாவட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். குடிநீர், பாசனம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய பிரதமர்; ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் 11 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்துள்ளது. மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்த திட்டம் தொடங்கப்பட்டது, வெறும் 3 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு இருந்தது.
இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள், சாலை, மின்சாரம் மற்றும் குடிநீர் உட்கட்டமைப்பில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக வாக்கு வங்கி அரசியலை ஊக்குவித்ததாகவும் மோடி விமர்சித்தார். பா.ஜ.க அரசாங்கத்தின் நோக்கம் வாக்கு வங்கி அரசியல் அல்ல; வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சி. அடுத்த, 25 ஆண்டுக்காலம் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் அமிர்த காலமாக இருக்கப்போகிறது. இதற்காக, நாம் இந்தியாவை வளர்ந்த நாடாக கட்டமைக்க வேண்டும். விளைநிலங்களில் நல்ல பயிர் சாகுபடி நடந்து, தொழில்கள் விரிவடையும் போது, இந்தியாவை நன்றாக மேம்படுத்த முடியும். பழங்குடியினர் நலனுக்கு ஒன்றிய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது.