
சென்னை: கடலூரில் பாஜக மாநில செயற்குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஈரோடு இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாஜகவின் தமிழக மாநில செயற்குழு மற்றும் மையக்குழு கூட்டம் கடலூரில் இன்று (ஜன.20) நடைபெற்று வருகிறது. பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர் கலந்து கொண்டுள்ளனர். செயற்குழுவை தொடர்ந்து, மாலையில் மையக்குழு கூட்டம் நடக்கிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக பாஜக சார்பில் முதல்கட்டமாக தேர்தல் குழு அமைக்கப்பட்டது. இதில் ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வேதானந்தம், எம்எல்ஏ சரஸ்வதி, என்பி பழனிசாமி உள்ளிட்ட 14 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த 14 பேர் கொண்ட குழு ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.