
மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் அதானி குழுமத்தின் 10 நிறுவனப் பங்குகளும் இன்று சரிவை சந்தித்துள்ளது மட்டும் அல்ல, 20 சதவீதம் வரை சரிந்து நீண்ட கால முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பெரும் சரிவுக்கு ஹிண்டன்பர்க் அறிக்கை முக்கியக் காரணமாக உள்ளது.

அதானி டேட்டல் கேஸ்
அதானி டேட்டல் கேஸ் பங்குகள் இன்று காலை வர்த்தகத்தில் 20 சதவீதம் வரை சரிந்தது. இதனால் முதலீட்டாளர்கள் ஒரே நாளில் பெரும் முதலீட்டு மதிப்பீட்டை இழந்தனர்.

10 நிறுவன பங்குகள்
தற்போது அதானி டேட்டல் கேஸ் 17.2 சதவீதம் சரிவு, அதானி டிரான்ஸ்மிஷன் 12.43 சதவீதம் சரிவு, அதானி கிரீன் 12.41 சதவீதம் சரிவு, அதானி எண்டர்பிரைசர்ஸ் 3.88 சதவீதம் சரிவு, அதானி பவர் 5 சதவீதம் சரிந்து லோவர் சர்கியூட் அளவைத் தொட்டது. அதானி வில்மார் மற்றும் NDTV 5 சதவீதம் சரிந்து லோவர் சர்கியூட் அளவீட்டைத் தொட்டது.

பெரும் சரிவு
அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ நிறுவன பங்குகள் 4.80 சதவீதம் வரை சரிவு, ஈசிசி லிமிடெட் 6.07 சதவீதம் சரிவு, அம்புஜா சிமெண்ட்ஸ் 8.13 சதவீதம் சரிவு சரிந்துள்ளது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச்
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கௌதம் அதானிக்கு சொந்தமான நிறுவனங்களை “வெட்கக்கேடான” சந்தை கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டது. ஹிண்டன்பர்க் அறிக்கை அதானி குழும நிறுவன பங்குகளை மட்டும் அல்லாமல் கௌதம் அதானியின் சொத்து மதிப்பிலும் பெரும் ஓட்டையைப் போட்டு உள்ளது.

அதானி மறுப்பு
இதேபோல் அதானி குழுமத்தின் கடன் இக்குழுமத்தை நிச்சயமற்ற நிதி நிலைக்குத் தள்ளியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தக் குற்றசாட்டுக்களைக் கடுமையாக மறுத்துள்ளது அதானி குழுமம், இதேபோல் ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளது.

மொத்த கடன்
தற்போதயத் தகவல் படி அதானி குழுமத்தின் டாப் 5 நிறுவனங்களான அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ், அதானி பவர், அதானி கிரீன், அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் மொத்த கடன் மதிப்பு 2.1 லட்சம் கோடி ரூபாய்.

சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு
இதன் எதிரொலியாக வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் குறியீடு 644.34 புள்ளிகள் சரிந்து 59,560.72 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 59,390 புள்ளிகள் வரையில் சரிந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு இன்று 137.85 புள்ளிகள் சரிந்து 17,754.10 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக நிஃப்டி குறியீடு 17,715.55 புள்ளிகளை எட்டியுள்ளது.