
ஐதராபாத்: நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா 12 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. கேப்டன் ரோகித் – கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12 ஓவரில் 60 ரன் சேர்த்தது. ரோகித் 34 ரன் விளாசி வெளியேறினார். கோஹ்லி 8 ரன், இஷான் 5 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினர். சூரியகுமார் 31 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியை தொடர்ந்த கில் நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தார். கில் – ஹர்திக் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்தது. ஹர்திக் 28 ரன், வாஷிங்டன் 12, ஷர்துல் 3 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
டாப் கியரில் எகிறிய கில் 208 ரன் (149 பந்து, 19 பவுண்டரி, 9 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்க, இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன் குவித்தது. குல்தீப் 5 ரன், ஷமி 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, 50 ஓவரில் 350 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால், அந்த அணி 28.4 ஓவரில் 131 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறிய நிலையில் பிரேஸ்வெல் – சான்ட்னர் ஜோடி கடுமையாகப் போராடி ரன் சேர்த்தது.
இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 162 ரன் சேர்த்து மிரட்டியது. சிராஜ் வீசிய 46வது ஓவரில் சான்ட்னர் (57 ரன், 45 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), ஷிப்லி (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய வீரர்களுக்கு மூச்சு வந்தது. 49வது ஓவரில் பெர்குசன் (8 ரன்) வெளியேறினார். ஷர்துல் வீசிய கடைசி ஓவரில் 20 ரன் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார் பிரேஸ்வெல். அடுத்த பந்து ஓய்டு ஆக அமைய, 5 பந்தில் 13 ரன் தேவை என்ற நிலையில் பிரேஸ்வெல் (140 ரன், 78 பந்து, 12 பவுண்டரி, 10 சிக்சர்) எல்பிடபுள்யு ஆக… நியூசிலாந்து 49.2 ஓவரில் 337 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய தரப்பில் சிராஜ் 4, குல்தீப், ஷர்துல் தலா 2, ஷமி, ஹர்திக் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தியா 12 ரன் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை வகிக்கிறது, 2வது போட்டி ராய்பூரில் நாளை மறுநாள் நடக்கிறது.
* இளம் வயதில் இரட்டை சதம்! கில்(லி) சாதனை
நியூசிலாந்து அணிக்கு எதிராக ஐதராபாத்தில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்திய இந்திய வீரர் சுப்மன் கில், மிக இளம் வயதில் 200 அடித்த வீரர் என்ற உலக சாதனையை வசப்படுத்தினார். கில் 23 வயது, 132 நாளில் இந்த சாதனையை படைத்துள்ளார். சக இந்திய வீரர் இஷான் கிஷன் (24 வயது, 145 நாள்) வங்கதேசத்துக்கு எதிராக சட்டோகிராமில் படைத்த சாதனையை கில் நேற்று முறியடித்தார்.
* சச்சின் டெண்டுல்கர் (200 ரன், 2010), வீரேந்திர சேவக் (219 ரன், 2011), ரோகித் ஷர்மா 209, 264, 208 (2013, 2014, 2017), இஷான் கிஷன் (210 ரன், 2022) ஆகியோருக்கு இரட்டைத் தொடர் 5வது இந்திய வீரர் என்ற பெருமையும் கில் வசமாகி உள்ளது.
* ஒருநாள் போட்டிகளில் 1000 ரன் என்ற மயில்கல்லை அதிவிரைவாக எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையையும் கில் (19 இன்னிங்ஸ்) நிகழ்த்தியுள்ளார். விராத் கோஹ்லி, ஷிகர் தவான் 24 இன்னிங்சில் 1000 ரன் எடுத்து படைத்த சாதனையும் நேற்று நொறுங்கியது. இந்த வரிசையில் பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக் (18 இன்னிங்ஸ்) முதல் இடத்திலும், கில் 2வது இடத்திலும் உள்ளனர்.