
கிரிப்டோ சந்தை
ஒரு காலத்தில் பல ஆயிரம் கோடிகளில் புரண்ட கிரிப்டோசந்தையானது, இன்று பல நூறு கோடியாக குறைந்துள்ளது எனலாம். ஒரு தரப்பினர் கிரிப்டோகரன்சிகள் கட்டாயம் முழுமையாக அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறி வரும் நிலையில், மற்றொரு தரப்பு இது உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தினையும் சரிவுக்கு கொண்டு செல்லும் என பயமுறுத்துகின்றனர்.

சரியான நெறிமுறை அவசியம்
இப்படி பற்பல கருத்துகளுக்கு மத்தியில் கிரிப்டோகரன்சிகள் குறித்த சரியான நெறிமுறை என்பது அவசியமான ஒன்று என்றும் கூறப்படுகின்றது. ஏனெனில் ஒரு காலத்தில் தங்கத்திற்கு மாற்றாக பார்க்கப்பட்ட கிரிப்டோகரன்சிகள், கடந்த ஆண்டு அதல பாதாளத்தை நோக்கி சென்றன. இதற்கிடையில் பற்பல கிரிப்டோகரன்சி நிறுவனங்கள் திவால் நிலையை எட்டின.

சரியான முதலீட்டு அம்சமா?
கிரிப்டோகரன்சிகளுக்கு எந்த விதமான ஊக்கமும் இல்லாத நிலையில், அவற்றை எப்படி ஒரு அசெட் ஆக கருத முடியும். இது இன்னும் தெளிவான ஒரு முதலீட்டு அம்சமாக இல்லை என்பது ஒரு தரப்பின் வாதமாக உள்ளது. ஆக ரிசர்வ் வங்கி கிரிப்டோகரன்சிகள் வர்த்தகம் குறித்து ஒரு தெளிவான நெறிமுறையை அமல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆக இது குறித்து பட்ஜெட் 2023ல் அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன.

கிரிப்டோகரன்சிகள் மீது வரி
இது குறித்து காஷாவின் தலைமை நிர்வாக அதிகாரியான குமார் கவுரவ், இ- ரூபாய் கொண்டு வரும்போது அரசு கூடுதலான விதிமுறைகளையும் அறிவிக்கலாம் எனத் தெரிவித்தார்.
அதேபோல கிரிப்டோகரன்சிகள் மீது வரியை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் அரசின் வருமானத்தினை அதிகரிக்கலாம். இதற்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

கிரிப்டோ மசோதா
குறிப்பாக கிரிப்டோகரன்சி மசோதா குறித்த அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற பெருத்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இது கிரிப்டோகரன்சிகளை கட்டுப்படுத்தலாம். இது கிரிப்டோகரன்சிகளை நெரிமுறைப்படுத்தலாம்.
பொதுவாக கிரிப்டோகரன்சிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதில் தீவிரவாதத்திற்கு நிதியளிக்கப்படுகிறது என பல பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இருந்து வருகின்றன. ஆக கிரிப்டோ நெறிமுறைகளில், மசோதாவில், இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செபி கட்டுப்பாட்டாளர்
பங்கு சந்தை, தங்கம் போல கிரிப்டோகரன்சிகளையும் ஒழுங்குபடுத்தும் செபியினைபோல அதிகாரப்பூர்வ அமைப்பு உருவாக்கலாம். அல்லது செபியையே நியமனம் செய்தாலும் அதை ஆச்சர்யப்படுத்துவதில்லை. மொத்தத்தில் கிரிப்டோகரன்சிகள் என்பது பங்கு சந்தை, கரன்சிகள், கமாடிட்டிகள போல இருக்க வேண்டும் என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. ஆனால் இதனை இந்தியா மட்டும் செய்ய முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் உலக நாடுகள் இணைந்து ஒழுங்குபடுத்த வேண்டும். இதற்கு சரியானதொரு வாய்ப்பாக ஜி20 அமைப்பு பார்க்கப்படுகிறது. அதிலும் இந்தியா தற்போது தலைமையேற்றுள்ள நிலையில், இது குறித்து விவாதிக்கப்படலாம்.