
தொடர் தோல்விகள்:
இதனால், ‘ஒருங்கிணைப்பாளர்’ இல்லாமல்தான் ஆசியக் கோப்பையில் இந்திய அணி விளையாடியது. டி20 உலகக் கோப்பையிலும் இதே நிலைதான். அந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பும்ராவுக்கு ‘இணை ஒருங்கிணைப்பாளர்’ முகமது ஷமி கொண்டுவரப்பட்டார். இருப்பினும், பும்ரா இல்லாததால், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அரையிறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது.
‘இணை ஒருங்கிணைப்பார்கள்’ அபாரம்:
இதனைத் தொடர்ந்து, பும்ரா அணிக்குள் வந்தால் மட்டும்தான் இந்திய வேகப்பந்து வீச்சு துறையை தூக்கி நிறுத்த முடியும் என பலர் பேச ஆரம்பித்தார்கள். ஆம், ‘இணை ஒருங்கிணைப்பார்’ ஷமி மீது நம்பிக்கை இல்லாமல்தான் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து இலங்கை தொடர் நடைபெற்றது.
இதில், ‘இணை ஒருங்கிணைப்பாளர்களாக ஷமி, முகமது சிராஜ்’ ஆகியோர், வேகப்பந்து வீச்சு துறையை சிறப்பாக வழிநடத்தினர். மிரட்டல் வெற்றிகளை இந்தியா பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, நம்பர் 1 ஒருநாள் அணியாக திகழ்ந்து வந்த நியூசிலாந்துக்கு எதிரான ஷமி, சிராஜ் இருவரும் பவர் பிளேவில் பட்டையைக் கிளப்பி, அணிக்கு வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்து தொடரைக் கைப்பற்ற உதவினார்கள்.
தக்க பதிலடி:
‘ஒருங்கிணைப்பாளர்’ பும்ரா இல்லை என்றால், பந்துவீச்சில் இந்தியா தொடர் தோல்விகளைத்தான் சந்திக்கும் எனக் கூறியவர்களுக்கு மத்தியில், ‘இணை ஒருங்கிணைப்பாளர்கள்’ ஷமி, சிராஜும் நம்பிக்கையளிக்கக் கூடிய வகையில் பந்துவீசி அசத்தி, தங்களை நிரூபித்துள்ளனர். கூடவே பும்ராவும் சேர்ந்துவிட்டால், அடேங்கப்பா, அணி வேற லெவல்தான் என ‘ரத்தத்தின் ரத்தங்களாகிய’ ரசிகர்கள் பூரிப்பில் உள்ளனர்.
ஷமி பேட்டி:
இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள முகமது ஷமி, பும்ரா இல்லையென்றால் அணியே இல்லை எனக் கூறியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், ”முன்னணி வீரர்கள் காயம்பட்டு, அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதற்காக போட்டிகள் நடக்காமல் இருக்காது. அவரை நிச்சயம் மிஸ் செய்கிறோம். ஏனெனில் பும்ரா சிறந்த பௌலர், அவர் மீண்டும் அணிக்கு விரைவில் திரும்புவார் என எதிர்பார்க்கிறேன். பும்ரா இல்லையென்றால், அணியின் பந்துவீச்சு மோசமாக இருக்கும் என எண்ணிவிடக் கூடாது. பும்ராவைப் போல சிறந்த வீரர்கள் அணியில் அதிகம் உள்ளனர்” எனக் கூறினார்.