
திருவனந்தபுரம்: பணக்கார வாலிபரை திருமணம் செய்வதற்காகவே நெய்யூர் கல்லூரி மாணவர் ஷரோன் ராஜா கிரீஷ்மா தனது வீட்டுக்கு வரவழைத்து கஷாயத்தில் பூச்சி மருந்து கலந்து கொலை செய்தார் என்று நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குமரி எல்லை அருகே உள்ள பாறசாலை மூரியங்கரையை சேர்ந்தவர் ஷரோன் ராஜ். குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்தார். ராமவர்மன் சிறையை சேர்ந்தவர் கிரீஷ்மா.
திருவிடங்கோட்டில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். பஸ்சில் ஒன்றாக செல்லும்போது 2 பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த நிலையில் கிரீஷ்மாவுக்கு குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரரை திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்பினர். அதற்கு அவரும் சம்மதித்தார். ஆனால் ஷரோன் ராஜ் திருமணத்திற்கு இடையூறாக இருப்பார் என்று கிரீஷ்மா எண்ணினார். இதற்காக கடந்த வருடம் அக்டோபர் 14 ஆம் தேதி ஷரோன் ராஜா கிரீஷ்மா தனது வீட்டுக்கு வரவழைத்து கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாரோன் ராஜ் அங்கு சிகிச்சை பலனின்றி அக்டோபர் 25ஆம் தேதி இறந்தார்.
இந்த வழக்கில் கிரீஷ்மா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று நெய்யாற்றின்கரை செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், ‘கிரீஷ்மாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர் மிகவும் பணக்காரர். இதனால் ஷரோன் ராஜை தவிர்ப்பதற்காகவே அவருக்கு கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து உள்ளார். அதற்கு முன்பே ஜூஸ் சேலஞ்ச் என்ற பெயரில் ஜூசில் பாரசிட்டமால் கலந்து கொடுத்துள்ளார். சம்பவத்தன்று ஷரோன் ராஜுடன் ஆபாசமாக வாட்ஸ் ஆப்பில் சாட்டிங் நடத்தி உள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.