
சென்னை ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்
சென்னையில் உள்ள பஞ்சபூத தலங்களில் நிலத்திற்குரிய தலமாக விளங்குவது தங்கசாலை எனப்படும் மிண்ட் பகுதியில் உள்ள ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் ஆகும். இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்தது.
கோவில் விபரம் :
மூலவர் – ஏகாம்பரேஸ்வரர்
தாயார் – காமாட்சி அம்மன்
தீர்த்தம் – கம்பநதி
தல விருட்சம் – மாமரம்
தல வரலாறு:

ஏகாம்பரேஸ்வரர் கோவில் 1680 ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அலங்காரநாத பிள்ளை என்பவரால் கட்டப்பட்டது. 1710 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் வெளியிடப்பட்ட சென்னை வரைபடத்தில் இக்கோவில் அல்லிகள் பகோடா என குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரரின் தீவிர பக்தரான அலங்காரநாத பிள்ளை பிரதோஷம் தோறும் தவறாமல் காஞ்சிபுரம் செல்வத்தை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் தாமதமாக கோவிலுக்கு புறப்பட்ட அவர், வழியிலேயே களைப்படைந்து இந்து இடத்தில் ஓய்வெடுத்தார். அவரது பக்தியை கண்டு மகிழ்ந்து அவருக்கு அம்பாளுடன் காட்சி தந்த சிவ பெருமான், இனி தன்னை காண சிரமப்பட்டு காஞ்சிக்கு வர வேண்டாம். தான் சுயம்புவாக இங்கு தோன்றி காட்சி தருவதாக கூறியதாகவும், அந்த இடத்தில் சிவ பெருமானின் ஆணையின் பேரில் அலங்காரநாதர் கோவில் எழுப்பியதாகவும் தல புராணம் சொல்கிறது.
கோவில் அமைப்பு:

காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பர நாதர் கோயிலில் மூலவர் லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இந்த தலம் நவகிரக பரிகார தலமாகவும், சொந்த வீடு வாங்க விரும்புவோரின் கனவை நிறைவேற்றும் தலமாகவும் விளங்குகிறது. திருமணத் தடைகளை நீக்கும் தலமாகவும் இந்த தலம் உள்ளது.
காமிக ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ள இக்கோவில் ஏழு நிலை ராஜ கோபுரங்களைக் கொண்டது. கருவறை திரிதள விமானத்தின் கீழ் அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் முதன்மை கோவில்களின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவிலின் தலவிருட்சமாக மாமரம் உள்ளது.
கோவில் சிறப்பு:

அம்பாள் ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாளின் பாதத்திற்கு முன் ஸ்ரீசக்கரம் உள்ளது. சிவனில் சக்தி அடக்கம் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளதால் இங்கு அம்மனே பிரதானமாகவும் கருதப்படுகிறார்.
விழாக்கள்:
ஐப்பசி மாதம் பூர நட்சத்திரத்தன்று திருக்கல்யாணம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பங்குனியில் 18ம் தேதி பிரம்மோற்சவம், சனிப்பெயர்ச்சி, ஆடிப்பூரம், பங்குனி உத்திரம் ஆகியன சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இது தவிர பிரதோஷம், திருவாதிரை, சிவராத்திரி போன்ற விழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
அமைவிடம் :
மிண்ட் சாலையில் அமைந்துள்ள இக்கோவில் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பாரிமுனையில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலைச் சுற்றி இரண்டு சமண ஆலயங்களும், கந்தசாமி கோவிலும் உள்ளன.
ஓம் நம சிவாய மந்திரம் சொல்வதால் என்ன பலன் கிடைக்கும் – கேள்விகளும், பதில்களும்
பிரார்த்தனை:

திருமண தடை உள்ளவர்கள், வீடு வாங்க விரும்புபவர்கள் இத்தல சிவனையும் அம்பாளையும் வழிபடுகின்றனர். சனி தோஷம் உள்ளவர்களும், தீய கனவுகளால் அவதிப்படுபவர்களும் இத்தலத்தில் வந்து வணங்குகிறார்கள். தீய கனவு தொல்லையில் இருந்து விடுபடவும், நல்ல கனவுகள் பலிக்கவும் கருவறைக்கு முன்புள்ள ஆஞ்சநேயருக்கு செந்தூர அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
கோவில் திறந்திருக்கும் நேரம் :
காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்,
தங்கசாலை (மைண்ட்), சென்னை.
தொலைப்பேசி : +91 – 044 – 2522 7177, 2535 2933