
சீனா
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும், உலகின் 2வது பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனாவில் 1961 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 2022 ஆம் ஆண்டு மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளது.

மக்கள் தொகை
2021 ஆம் ஆண்டு சீன மக்கள் தொகை எண்ணிக்கை 1.41260 பில்லியன் ஆக இருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் 1.41175 பில்லியன் மக்கள் மட்டுமே உள்ளதாகவும் அந்நாட்டின் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.

பிறப்பு விகிதம்
2021 ஆம் ஆண்டு சீனாவில் 1000 பேருக்கு 7.52 என்ற குழந்தை பிறப்பு விகிதம் இருந்த நிலையில், 2022 ஆம் ஆண்டில் இதன் அளவு 6.77 ஆகக் குறைந்துள்ளது. இது மட்டும் அல்லாமல் சீன வரலாற்றிலேயே 6.77 பிறப்பு விகிதம் என்பது குறைவான அளவீடாகும்.

இறப்பு விகிதம்
இதேவேளையில் சீனாவில் இறப்பு விகிதம் 1976க்கு பின்பு உச்ச நிலையை அடைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு 1000 பேருக்கு 7.18 ஆக இருந்த இறப்பு விகிதம் 2022 ஆம் ஆண்டில் 7.37 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு குழந்தை திட்டம்
1980 முதல் 2015 வரையில் சீனாவில் நடைமுறையில் இருந்து ஒரு குழந்தை திட்டம் அண்ணாடு முழுவதும் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் மக்களின் மனதளவில் இது பெரிய அளவிலான மாற்றத்தைப் பதிவு செய்தது.

கல்விக்கான செலவுகள்
இதேவேளையில் சீனாவில் கல்விக்கான செலவுகள் விண்ணை முட்டிய நிலையில் இளம் பெற்றோர்கள் சீன அரசு ஒரு குழந்தை திட்டத்தை 2015ல் நீக்கிய பின்பும் ஒரு குழந்தை போதும் என்ற நிலையில் குழந்தையே வேண்டாம் என்ற மனநிலைக்கு மாறியுள்ளனர்.

மருத்துவச் சேவைகள்
இதே நேரத்தில் சீனாவில் ஏற்பட்ட பாதிப்பு மருத்துவச் சேவைகளால் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது. இக்காலகட்டத்தில் கருவுற்றவர்களுக்கு போதுமான மருத்துவ வசதிகள் கிடைக்காத காரணத்தால் தடுமாறினர்.

கோவிட் வேக்சின்
இது மட்டும் அல்லாமல் கோவிட் வெக்சின் பெற்றுக்கொண்டால் அடுத்த 6 மாதம் முதல் 1 வருடம் வரை குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்ற தகவல் சீன இளம் தலைமுறையினரை அதிகம் பயமுறுத்தியது. இதனால் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதால் வேக்சின் போட்டுக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை ஒத்திவைத்தனர். ஆனால் இந்தத் தகவல் பொய் எனப் பின்னாளில் அரசு விளக்கம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஊக்குவிப்பு
ஒன்றுக்கும் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள மக்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளாகச் சீனாவில் மாநில அரசுகள் 2021 முதல் வரி விலக்குகள், நீண்ட மகப்பேறு விடுப்பு மற்றும் வீட்டு மனைகள் உட்பட பல்வேறு திட்டங்களை அறிவித்து முயற்சி வருகிறது. இந்த நடவடிக்கைகள் நீண்ட காலப் போக்கை உடனடியாக மாற்றாது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.