
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 19 ஜனவரி, 2023 10:41 PM
வெளியிடப்பட்டது: 19 ஜனவரி 2023 10:41 PM
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 19 ஜனவரி 2023 10:41 PM

கிரிக்கெட் விளையாட்டை அதிகம் விளையாடும் குடும்பத்தில் இருந்து புறப்பட்டு வந்துள்ள மற்றொரு கிரிக்கெட் வீரர்தான் பிரேஸ்வெல். இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அபாரமாக பேட் செய்த வீரர். அதோடு முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் அரிதான சாதனையை சமனும் செய்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 78 பந்துகளில் 140 ரன்களை சேர்த்தார். இதில் 12 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 179.49. இந்தப் போட்டியில் இரண்டு சிக்சர்களை அவர் கூடுதலாக விளாசி இருந்தால் இந்திய அணியின் வெற்றியை பறித்திருப்பார்.
யார் இவர்?
31 வயதான ஆல் ரவுண்டரான பிரேஸ்வெல் இடது கை பேட்ஸ்மேன், வலது கை ஆப்-பிரேக் பவுலர். கடந்த 10 மாதங்களுக்கு முன்புதான் சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுகமானார். இப்போது நியூஸிலாந்து அணியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளில் விளையாடி வருகிறார். ஒட்டுமொத்தமாக இதுவரை 34 சர்வதேச போட்டிகளில் விளையாடி 730 ரன்கள் மற்றும் 43 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே 2 சதம் உட்பட 462 ரன்கள் குவித்துள்ளார்.
முதல் தரடில் கிரிக்கெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடந்த ஆண்டு நியூஸிலாந்து அணிக்காக அறிமுகமானார். இவரது தந்தை மார்க் பிரேஸ்வெல், நியூசிலாந்தில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவரது மாமன்கள் ஜான் பிரேஸ்வெல், டக்ளஸ் பிரேஸ்வெல் மற்றும் பிரெண்டன் பிரேஸ்வெல் என மூவரும் கிரிக்கெட் வீரர்கள்தான். இவரது உறவினர் டக் பிரேஸ்வெல் இப்போது நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தோனியின் சாதனையை சமன் செய்த சம்பவம்
ஒருநாள் கிரிக்கெட்டில் 7 அல்லது அதற்கும் கீழான பேட்டிங் ஆர்டரில் களம் கண்டு 2 சதங்களை பதிவு செய்த வீரர் என்ற சாதனையை தோனி படைத்திருந்தார். தற்போது அதனை சமன் செய்துள்ளார் பிரேஸ்வெல். ஒருநாள் கிரிக்கெட்டில் 7 அல்லது அதற்கு கீழான பேட்டிங் ஆர்டரில் களம் கண்டு ஒரு சதத்திற்கு மேல் அடித்த வீரராகி உள்ளார். இது இந்தியாவுக்கு எதிரான அந்த 140 ரன்களை சேர்த்த போது அரங்கேறியது.
7 இன்னிங்ஸ்களில் 7வது பேட்ஸ்மேனாக களம் கண்டு இரண்டு சதங்களை அவர் பதிவு செய்துள்ளார். இந்த இடத்தில் இவரது செயல்பாடு நியூஸிலாந்து அணிக்கு உதவும்.
தவறவிடாதீர்!