
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் ஏழை – பணக்காரர் இடைவெளி அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக பொருளாதார ஆண்டு கூட்டத்தில் OXFAM இன்டர்நேஷனல் என்ற அமைப்பு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில் இந்தியாவின் 40 சதவீத சொத்துகள் 1 சதவீத பெரும் பணக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதனை சுட்டிக்காட்டியுள்ள மல்லிகார்ஜுன கார்கே, மோடி ஆட்சியில் ஏழை பணக்காரர் இடையே இடைவெளி அதிகரித்துவிட்டதாக உள்ளது. இந்திய ஒற்றுமை பயணம் பொருளாதார ஏற்றத்தாழ்வை நிரப்பக்கூடிய இயக்கம் என்றும் அவர் கூறியுள்ளார். இதேபோல் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 20 கோடி இந்தியர்களை வறுமையின் பிடியில் இருந்து விடுவித்ததாகவும், ஆனால் மோடி அரசு அவர்களை மீண்டும் வறுமையின் பிடியில் தள்ளிவிட்டதாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் சாடியுள்ளார். மக்களின் வறுமையை அதிகரித்துவிட்ட மோடி அரசின் கொள்கைகளை எதிர்க்கும் செயலாக இந்திய ஒற்றுமை நடைபயணம் திகழ்கிறது என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.