
கலிபோர்னியா: கூகுள் நிறுவனம் அண்மையில் சுமார் 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்த நடவடிக்கையில் 4 மாத குழந்தைக்கு பெற்றோர் ஆன தம்பதியரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் இருவரும் அடுத்து என்ன செய்வதென தெரியாமல் தவித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட தம்பதியரின் பெயர் ஸ்டீவ் மற்றும் அல்லி என தெரிகிறது. இருவரும் பணிக்காக வேண்டி கலிபோர்னியாவுக்கு புலம்பெயர்ந்து வந்துள்ளனர். அல்லி, கூகுள் நிறுவனத்தில் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியுள்ளார். ஸ்டீவ், கடந்த 2 ஆண்டுகளாக கூகுளில் பணியாற்றி உள்ளார்.
4 மாதங்களுக்கு முன்பு தம்பதியருக்கு குழந்தை பிறந்துள்ளது. பேறுகால விடுப்பில் தற்போது அல்லி உள்ளார். ஸ்டீவ், தனக்கான கட்டாய விடுப்பில் 2 மாத விடுப்புகளை அண்மையில் எடுத்து முடித்துள்ளார். மேலும் அவருக்கு 2 மாத காலம் விடுப்பு மிச்சம் உள்ளதாம். அதை மார்ச் மாதம் எடுக்கலாம் என திட்டமிட்டுள்ளார். இந்தச் சூழலில்தான் தம்பதியர் பணி நீக்க நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளனர்.
ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் கையில் எடுத்துள்ள ஆட்குறைப்பு நடவடிக்கையை கூகுள் நிறுவனமும் முன்னெடுத்துள்ளது. மருத்துவ மற்றும் கட்டாய விடுப்பில் உள்ள அல்லது விரைவில் எடுக்க வேண்டிய ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் மற்றும் இந்த நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.