
புதுச்சேரி: தைத் திருநாளாம் பொங்கல் விழா தமிழகம், புதுச்சேரியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதனிடையே தைப் பொங்கலையொட்டி புதுச்சேரியில் பெண்கள் தங்களது வீடுகள் முன்பு பலவிதமான பலவண்ண கோலங்களை வரைந்து அசத்தியிருந்தனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே பொங்கல் கோலப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதனிடையே மாட்டுப் பொங்கலையொட்டி புதுச்சேரியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு வரையப்பட்டிருந்த கோலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதாவது புதுச்சேரி அரசு கடந்த வாரம் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்திய நிலையில், மின்கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுத்து விரைவில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் அரசை வலியுறுத்தி வருகின்றன. இவற்றை திரும்ப பெற வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த நிலையில் முதல்வர் தொகுதியான தட்டாஞ்சாவடி, கவுண்டன்பாளையத்தில் ஒரு இல்லத்தரசி தனது வீட்டின் முன்பு மாட்டுப் பொங்கலையொட்டி உழவனுக்கு உதவிடும் பசுமாட்டின் வரைபடம் நேற்று வரைந்திருந்தார். அதோடு தனது குடும்பத்துக்குள்ள கஷ்டத்தை அரசுக்கு வெளிப்படுத்தும் வகையில் பால் விலை, மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் அதில் ‘தமிழன்டா…. புதுச்சேரி அரசே உயர்த்திய பால் விலையை, மின் உயர்த்திய மின்சார கட்டணத்தை திரும்பப் பெறு….’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
இதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் படித்துவிட்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும், இக்கோலம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.