
மும்பை: டிஆர்எஸ் சிஸ்டத்தை ரசிகர்கள் தோனி ரிவ்யூ சிஸ்டம் என அழைப்பதை தோனியும் அறிவார் என முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் இந்த நாள் கேப்டனுமான தோனி, பேட்டிங், விக்கெட் கீப்பிங் மற்றும் காயங்கள் எடுப்பதில் கைதேர்ந்தவர். அதோடு டிஆர்எஸ் முறையில் ரிவ்யூ எடுக்கலாமா, வேண்டாமா என்பதிலும் கைதேர்ந்தவர். அவர் ரிவ்யூ எடுத்தால் நிச்சயம் அது அணிக்கு சாதகமாகவே இருக்கும்.
அப்படி சர்வதேச கிரிக்கெட் களத்தில் அவர் எடுத்த டிஆர்எஸ் ரிவ்யூ பெரும்பாலும் சரியானதாகவே இருக்கும். அதனால் ரசிகர்கள் அதனை தோனி ரிவ்யூ சிஸ்டம் என அன்போடு அழைப்பது வழக்கம்.
“ரசிகர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் டிஆர்எஸ் என்பது தோனி ரிவ்யூ சிஸ்டம்தான். டிஆர்எஸ் குறித்த விவரம் எனக்கு பின்னாளில்தான் தெரியவந்தது. பவுலர்கள் எப்போதும் அவுட் என்றுதான் சொல்வார்கள். ஆனால் ஸ்டெம்புக்கு பின்னால் நிற்கும் அவரது முடிவுகள் துல்லியமாக இருக்கும். அதுவும் நீண்ட யோசனைக்கு பிறகு கடைசி நொடியில் அதை எடுப்பது அவரது ஸ்டைல். தோனி ரிவியூ சிஸ்டம் என டிஆர்எஸ்ஸை ரசிகர்கள் அழைப்பதை தோனியும் நன்கு அறிவார்” என ரெய்னா தெரிவித்துள்ளார்.