
கோவை: இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு (ஐடிஎப்) சார்பில் நான்கு மாநிலங்களைச் சேர்ந்த ஜவுளித் தொழில்முனைவோர் கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவையில் நடந்தது.
கூட்டத்தில், “பருத்தி விளைச்சல் மற்றும் சந்தையின் போக்கு, தரம் மேம்பாடு போன்ற விஷயங்களில் தகவல் பரிமாற்றங்களை தொடர்ச்சியாக பகிர்ந்து கொள்வது. உள்நாட்டு, வெளிநாட்டு நூல் மற்றும் துணி விற்பனையில் ஏற்படும் மாற்றங்களையும், தேவை குறித்த மாறுதல்களையும் பகிர்ந்து கொள்வது.
உற்பத்திக்கான அளவுகோல்கள், உற்பத்தி செலவுகளை குறைக்கும் முயற்சிகள், தொழில்நுட்ப மேம்பாடு போன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்ள குழுக்களை அமைப்பது. நூற்பாலைகளின் அடுத்த கட்ட முயற்சி, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கு புது முதலீடுகளுக்கான அறிவுசார் வழிமுறைகளை ஆராய்வது.
இந்திய மற்றும் ஏற்றுமதி ஜவுளி சந்தையில் ஏற்படும் மாற்றங்களை மாதாந்திர ஆன்லைன் கூட்டங்கள் நடத்துவதன் மூலம், சரியான புரிதலை கொண்டு வருவது” என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும், கூட்டத்தில் தற்போதைய ஜவுளித்தொழில் நிலை குறித்தும், ஏற்றுமதிக்கான வாய்ப்புகள், போட்டித் திறனை வளர்க்க வேண்டிய முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஆந்திரா நூற்பாலை சங்கத்தின் நிர்வாகி சலபதிராவ், தெலங்கானா சங்கத்தின் நிர்வாகி அகர்வால், குஜராத் சங்கத்தின் நிர்வாகி ரிப்பில் படேல், ஐடிஎப் தொழில் அமைப்பின் நிர்வாகிகள் பிரபு தாமோதரன், அரவிந்த் செல்வபதி, சரவண சுதன் உட்பட தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த 120 நூற்பாலை உரிமையாளர்கள் உள்ளனர்.