
பொருளாதார ஆய்வறிக்கை
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பு, மற்றொரு முக்கிய ஆவணம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த அறிக்கையின் பெயர் பொருளாதார ஆய்வறிக்கை, இதுதான் இந்திய பொருளாதாரத்தின் நிலையை எடுத்துக்காட்டும் முழுமையான அறிக்கை.

பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன?
மத்திய பட்ஜெட்டைப் போலவே, பொருளாதார ஆய்வறிக்கையும் மத்திய அமைச்சகத்தால் தயாரிக்கப்படும் ஒரு முக்கிய அறிக்கை. நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரங்கள் துறை, கணக்கெனப்பை தயாரிக்கிறது.

ஜனவரி 31 தாக்கல்
இந்த ஆவணம் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பிக்கப்படுகிறது, பொதுவாக மத்திய பட்ஜெட்டுக்கு ஒரு நாள் முன்னதாகத் தாக்கல் செய்யப்படும். இதன் படி இந்த ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைகிறது. இதனால் ஜனவரி 31 ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

பொருளாதார ஆலோசகர்
மேலும் இந்தப் பொருளாதார ஆய்வறிக்கை இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகரின் வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்பட்டது. மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் பெயர் அனந்த நாகேஸ்வரன். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (PMEAC) முன்னாள் உறுப்பினரான வி அனந்த நாகேஸ்வரன், 2023 -24 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான பட்ஜெட் திட்டம் தயாரிப்பதற்கான சில வாரங்களுக்கு முன்பு தான் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

பொருளாதார ஆய்வறிக்கையின் நோக்கம் என்ன?
இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கையில் இந்தியப் பொருளாதாரத்தின் நிலை, நிதி வளர்ச்சிகள் மற்றும் நிதி மேலாண்மை மற்றும் வெளித் துறைகள் பற்றிய விபரங்கள் அடங்கியுள்ளன.
ஆய்வறிக்கையில் நாட்டின் முந்தைய ஆண்டின் பொருளாதாரத்தின் நிலையை ஆய்வு செய்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தின் முக்கிய வளர்ச்சி வாய்ப்புகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது.

பட்ஜெட் அறிக்கை
இது வரவு செலவுத் திட்டத்தை எடுக்க வேண்டிய தேவையான முக்கியக் கொள்கை முடிவுகளுக்கு அடித்தளமிடுகிறது. இது மட்டுமல்லாமல், பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளின் விரிவான புள்ளிவிவர தரவு மூலம் முந்தைய பட்ஜெட் அறிவிப்புகளின் தாக்கத்தை மதிப்பிட முடியும்.

பொருளாதார ஆய்வறிக்கையை முன்வைப்பது யார்?
பொருளாதார ஆய்வறிக்கையை எப்போது மத்திய நிதியமைச்சர் தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார். கடந்த ஆண்டு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை ஜனவரி 31ஆம் தேதி தாக்கல் செய்தார்.

முதல் பொருளாதார ஆய்வறிக்கை
இந்தியாவின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை 1950-51 இல் சமர்ப்பிக்கப்பட்டது. 1964 வரை, இந்தப் பொருளாதார ஆய்வறிக்கை மத்திய பட்ஜெட் அறிக்கையுடன் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் தனியாகப் பிரிக்கப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முந்தைய நாளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.