
மதுரை: அத்தியாவசிய காய்கறிகள் விலை அதிகரித்துள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் அன்றாட காய்கறிகளை பயன்படுத்த முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காய்கறிகள் விலையை பொருத்தவரை ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே இருக்கும். சின்ன வெங்காயம், தக்காளி, கேரட், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் காய்கறிகளை வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி சந்தையில் நேற்று கத்திரிக்காய் கிலோ ரூ.40 முதல் ரூ.50, வெண்டைக்காய் ரூ.60 முதல் ரூ.70, பீர்க்கங்காய் ரூ.40 முதல் ரூ.60, சின்ன வெங்காயம் ரூ.60 முதல் ரூ.80, தக்காளி ரூ.20 முதல் ரூ.30 வரை , கேரட் ரூ.40 முதல் ரூ.60 பீட்ரூட் ரூ.40 முதல் ரூ.50, சேம்பு ரூ.7, பீன்ஸ் ரூ.60, அவரை ரூ.50 விலையில் விற்கிறது.
சில்லறை கடைகளில் விலை இன்னும் அதிகமாக உள்ளது. முட்டைக்கோஸ், பாகற்காய் உள்ளிட்ட ஒரு சில காய்கறிகள் மட்டுமே விலை குறைவாக விற்கப்படுகிறது.
இதுகுறித்து தோட்டக் கலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ”விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட காய்கறி விலை அதிகரித்தால் அதே காய்கறியை அனைவரும் பயிரிடுகிறார்கள். வெளிநாடுகளில் ஒவ்வொரு பயிரையும் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே பயிரிட வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உள்ளன. அதுபோன்று இங்கு கட்டுப்பாடு விதிக்க முடியாது.
இந்த சீசனில் இந்த காய்கறிகளை பயிரிடுங்கள் என்று ஆலோசனை மட்டுமே கூறலாம். மழை பெய்தால் தரிசு நிலங்களும் விளைநிலங்களாக மாறி விளைச்சல் அதிகரித்து விலை வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல, உற்பத்தி குறைந்து குறிப்பிட்ட காய்கறிகள் விலை அதிகரித்தால் அதை அனைவரும் பயிரிட்டு வரத்து அதிகரித்து அதன் விலையும் குறைந்து விடுகிறது.
வடமாநிலங்களில் பெரும் பாலானோர் பெரு விவசாயிகள். ஆனால், தமிழகத்தில் குறு விவசாயிகள் அதிகம். அதனால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது சவாலான விஷயம். இவ்வாறு அவர்கள் கூறினர்.