
புது டெல்லி: கடந்த சில ஆண்டுகளாக ஃபாஸ்ட் டேக் மூலம் மின்னணு சுங்கச்சாவடி வசூல் நிலையான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. 2022-ஆம் ஆண்டு மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் உட்பட ஃபாஸ்ட் டேக் (FASTag) மூலம் மொத்த சுங்க வசூல் ரூ.50,855 கோடியாக இருந்தது. இது 2021-ஆம் ஆண்டின் ரூ.34,778 கோடியுடன் ஒப்பிடுகையில் சுமார் 46 சதவீதம் அதிகமாகும்.
2022 டிசம்பர் மாத நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் மூலம் சராசரி தினசரி சராசரி ரூ.134.44 கோடியாகும். டிசம்பர் 24-ந் தேதி மிக அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.144.19 கோடி வசூலாகியுள்ளது. இதேபோல ஃபாஸ்ட்டேக் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் 2022 ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 48 சதவீதம் வளர்ச்சியைக் கண்டறிந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ஃபாஸ்ட்டேக் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 219 கோடியாகவும், 2022-ல் 324 கோடியாகவும் இருந்தது.
இதுவரை 6.4 கோடி ஃபாஸ்ட்டேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. 2022-ல் நாடு முழுவதும் ஃபாஸ்ட்டேகுகள் பயன்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 1181 (323 மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் உட்பட). 2021-ல் இது 922 ஆக இருந்தது. மாநில ஃபாஸ்டேக் திட்டத்தின் கீழ் சுங்கச்சாவடிகள் செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 29 மாநில நிறுவனங்கள் மற்றும் ஆணையங்களுடன் பெறப்பட்டுள்ளன.