
புதுடெல்லி: பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக்கு உடனடியாக உதவ இந்தியா முன்வந்ததாக இந்தியாவுக்கான சிரிய தூதர் பஸ்ஸாம் அல் காதிப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நேற்று (திங்கள்கிழமை) நிகழ்ந்த பூகம்பங்களால் துருக்கிக்கு அடுத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடு சிரியா. இந்நாட்டில் பூகம்பத்தால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 602 ஆக உயர்ந்துள்ளது. பல ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
பூகம்பத்தால் சிரியா பாதிக்கப்பட்டது குறித்த தகவல் அறிந்ததும், ஆழ்ந்த வேதனையை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரிய மக்களுக்கு இந்தியா உதவும் என உறுதி அளித்தார். இதையடுத்து, சிரியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஃபைசல் மேக்தாத்-ஐ தொடர்பு கொண்டு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். மருந்துப் பொருட்களை அனுப்புவது உள்ளிட்ட உதவிகளை இந்தியா வழங்கும் என அப்போது அவர் உறுதி அளித்தார்.
இதையடுத்து, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான C-130J விமானம் மூலம் மருந்துப் பொருட்களை சிரியாவுக்கு இன்று அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளை விமானப்படை மேற்கொண்டது. இதனிடையே, டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான சிரிய தூதர் பஸ்ஸாம் அல் காதிப்-பை இந்திய வெளியுறவு இணை அமைச்சர் வி. முரளிதரன் நேரில் சந்தித்து இந்தியாவின் வேதனையை பகிர்ந்து கொண்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவுக்கான சிரிய தூதர் பஸ்ஸாம் அல் காதிப் கூறியதாவது: ”பூகம்பத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள பல்வேறு நட்பு நாடுகள் சிரியாவுக்கு உதவி வருகின்றன. இதனால் நிலைமை மேம்பட்டு வருகிறது. பூகம்பம் ஏற்பட்டது குறித்த தகவல் அறிந்தது முதல் இந்தியா உணர்வுபூர்வமாக சிரிய மக்களுடன் உள்ளது.
இந்தியாவின் உதவியை கோருமாறு எங்கள் அரசு எனக்கு தகவல் தெரிவித்த உடன் நான், இந்திய வெளியறவு அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டேன். அவர்கள் உடனடியாக உதவ முன்வந்தார்கள். என்னென்ன உதவிகள் வழங்கப்பட உள்ளன என்பதை சில மணி நேரங்களில் தெரிவித்தார்கள். எல்லாமே மிக வேகமாக நடந்தது.
பூகம்பத்தில் உயிரிழந்த சிரிய மக்களுக்கு சகோதர உணர்வுடன் இந்தியா இரங்கல் தெரிவித்தது. புதிய எதிர்காலத்திற்கான இந்தியாவின் செயல்பாட்டை இதில் நாங்கள் பார்த்தோம். இந்தியா தெற்கின் குரலாக உள்ளது. அதோடு, சிறந்த எதிர்காலத்தை எதிர்நோக்குபவர்களின் குரலாகவும் இந்தியாவின் குரல் உள்ளது” என தெரிவித்தார்.