
புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கில் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துபூர்வ வாதங்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதில்,”ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்கியவுடன் அவர் கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக அதிமுக விதிகளின் படி, ஐந்தில் ஒருபங்கு உறுப்பினர்கள் கோரிக்கையின் அடிப்படையில் பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் உள்ளது. அதன்படி தான் கடந்த ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் முடங்கிப் போய் உள்ளது.
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்த நீதிமன்றங்களிலும், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திலும் தவறான தகவல்களை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொடுத்து வருகின்றனர். அதனை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளக் கூடாது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியது அதிமுகவின் உட்சபட்ச அதிகாரங்களைக் கொண்ட ஒரு அமைப்பான அதிமுக பொதுக்குழு தான். அதற்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு.
அதன் அடிப்படையில் தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அதிமுக, இரட்டை இலை சின்னம் உள்ளிட்டவைக்கு உரிமைக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தை அணுகவும் உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். அதிமுக பொதுக்குழு விவகாரத்தை பொருத்தமட்டில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர விசாரணை நடத்திய பின்னர் தான் தெளிவாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதனால் அதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் மிகவும் அற்பத்தனமான ஒன்று என்பதால் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.