
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கெடுபிடிகள் காரணமாக, ஜவுளிச்சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே வாரந்தோறும் திங்கள் இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை கனி ஜவுளிச்சந்தையில் மொத்த வியாபாரம் நடந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் இந்த சந்தையில் மொத்த ஜவுளி கொள்முதல் செய்வர்.
சாதாரண நாட்களில் ரூ.2 கோடி அளவிலும், பண்டிகை நாட்களில் ரூ.5 கோடி வரையும் வர்த்தகம் நடைபெறும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
வாகனச் சோதனை நடத்தப்படுவதாலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்பட்டாலும், வெளியூர் மற்றும் வெளி மாநில வியாபாரிகள் வருகை நேற்று முற்றிலும் குறைந்தது.
இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது: ஜவுளிச் சந்தை விற்பனையில் பொதுவாக ரொக்க பரிமாற்றமே அதிகமிருக்கும். தேர்தல் நடத்தை விதிமுறைகளால், அவற்றை எடுத்து வந்தால் பறிமுதல் செய்யப்படும் என்ற அச்சத்தால், பெரும்பான்மையான வியாபாரிகள் ஜவுளி கொள்முதலுக்கு வரவில்லை. கோடிக்கணக்கில் ஜவுளி வர்த்தகம் நடக்கும் மொத்த சந்தையில் நேற்று சில லட்சங்களுக்கு மட்டுமே ஜவுளி விற்பனை நடந்தது, என்றனர்.