
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று மதசார்பற்ற முற்போக்குக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 2023-ஆம் ஆண்டு வரும் பிப்ரவரி திங்கள் 27ஆம் நாள் தமிழகத்தில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலையொட்டி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணித் தலைவர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து பேசி, ஏற்கெனவே 2021 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றக் காரணத்தால், தற்போது இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் திருமகன் ஈவெரா. கடந்த 4-ம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக பேரவைச் செயலகம் அறிவித்தது.
இதற்கிடையில், மேகாலயா உள்ளிட்ட 3 மாநிலத் தேர்தலுடன், 6மாநிலங்களில் காலியாக உள்ள, ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளிட்ட7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப். 27-ல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.