
ஜோதிடம்
ஓ-ஜெயலட்சுமி சி
சென்னை: 2023ஆம் ஆண்டின் இரண்டாவது மாதம் பிப்ரவரி மாதம். இந்த மாதத்தில் நவ கிரகங்களின் பயணமும் சில ராசிக்காரர்களுக்கு சின்னச் சின்ன மாற்றங்களைத் தரப்போகிறது. சனியின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். பிப்ரவரி மாதத்தில் சூரிய பகவான் மகர ராசியில் பாதி நாட்களும் கும்ப ராசியில் 15 நாட்களும் பயணம் செய்வார். சுக்கிரன் கும்ப ராசியிலும் 15ஆம் தேதிக்கு மேல் மீன ராசியில் உச்சம் பெற்று பயணம் செய்வார். புதன் மகர ராசியிலும் மாத இறுதியில் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். செவ்வாய் மாதம் முழுவதும் ரிஷப ராசியில் பயணம் செய்வார். இந்த கிரகங்களின் பயணத்தால் மிதுனம், கடக ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

மிதுனம்

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு கிரகங்களைப் பார்த்தால் ஐந்தாம் வீட்டில் கேது, ஏழாம் வீட்டில் ராசிநாதன் புதன், எட்டாம் வீட்டில் சூரியன், ஒன்பதாம் வீட்டில் சனி சுக்கிரன், பத்தாம் வீட்டில் குரு, லாப வீட்டில் ராகு, விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த மாதம் முதல் உங்களுக்கு அஷ்டமத்து சனி விலகியதால் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். சூரியனைத் தவிர மற்ற கிரகங்கள் எல்லாமே சாதகமாக உள்ளன.
13ஆம் தேதிக்குப் பிறகு சூரியனும் ஒன்பதாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகி சனியுடன் இணைந்து விடுவார். புதிய நம்பிக்கைகள் துளிர்விடும் மாதமாக பிப்ரவரி மாதம் அமைந்துள்ளது. தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது. சுக்கிரன் உச்சமடைந்து பத்தாம் வீட்டில் குருவுடன் இணையும் காலத்தில் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரப்போகிறது. சரியான நேரத்தில் வரும் வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
வேலையில் நீங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் உண்டாகும். வேலையில் திடீர் மாற்றம் உண்டாகும். நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
சுக்கிரன் உச்சம் பெற்று பயணம் செய்வது சிறப்பாக உள்ளதால் காதல் மலரும். காதலிப்பவர்களுக்கு திருமணத்தில் முடிய வாய்ப்பு உள்ளது. எந்த பிரச்சினைகளையும் தைரியமாக எதிர்கொண்டு சமாளிப்பீர்கள். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்களுக்கான நல்ல நேரத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களை தைரியமாக சமாளிப்பீர்கள். மிதுன ராசிக்காரர்களுக்கு இனி எல்லாம் சுகமாக அமையப்போகிறது.
கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்கிறார். ஏழாம் வீட்டில் சூரியன், எட்டாம் வீட்டில் சனி சுக்கிரன், பத்தாம் வீட்டில் ராகு, லாப ஸ்தானத்தில் செவ்வாய், நான்காம் வீட்டில் கேது, ஆறாம் வீட்டில் புதன் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. 6,8 ஆம் இடங்களில் கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் பயணமும் பார்வையும் இந்த மாதம் உங்களுக்கு சாதகமான நிலையில் இருப்பதால் பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படாமல் தப்பிக்கலாம்.
மாதம் பிறக்கும் போதே உங்களுக்கு சந்திரமங்கல யோகம் லாப ஸ்தானத்தில் நிகழ்வதால் அற்புதமாக உள்ளது. வேலையில் இந்த மாதம் புதிய உற்சாகம் பிறக்கும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு இருந்தாலும் கவனம் தேவை. வேகத்தை குறைத்து விவேகத்தை கடைபிடிப்பது நல்லது. விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். தடைகள் வந்தாலும் எளிதில் சமாளிப்பீர்கள்.
அஷ்டமத்து சனி சில கஷ்டங்களைத் தருவார். புது இடங்களுக்கோ, புது வேலைக்கோ சென்று பிரச்சினையில் சிக்கிக்கொள்ள வேண்டாம். திருமணம் சுப காரியம் இந்த மாதத்தில் அவசரப்படாமல் செய்வது நல்லது. குரு பலனால் திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கைகூடி வரும். காதலிப்பவர்கள் கவனம் தேவை. பேசும் வார்த்தைகளால் பிரிவுகள் வர வாய்ப்பு உள்ளது. இந்த மாதம் அதிக விழிப்புணர்வு தேவை. வேலையை யாரை நம்பியும் ஒப்படைக்க வேண்டாம்.
தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் பண முதலீடுகள் செய்து அகலக்கால் வைக்காதீர்கள். மன குழப்பம் உண்டாகும் எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்வது நல்லது. பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வேலைப்பளு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். மாணவர்களின் பெற்றோர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது. படிப்பில் அதிக அக்கறையும் கவனமும் செலுத்த வேண்டும். சோதனைகளை கடந்தால் சாதனையாளராக மாறலாம். மொத்தத்தில் கடக ராசிக்காரர்களுக்கு அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டிய மாதமாக பிப்ரவரி மாதம் அமைந்துள்ளது.
ஆங்கில சுருக்கம்
பிப்ரவரி மாத ராசி பலன் 2023 தமிழ்: பிப்ரவரி மாத ராசி பலன் மிதுனம் மற்றும் கடகம் 1 பிப்ரவரி 2023 முதல் 27 பிப்ரவரி 2023 வரை.
கதை முதலில் வெளியிடப்பட்டது: செவ்வாய், ஜனவரி 24, 2023, 15:08 [IST]