
சூரிய ஒளி ஊட்டச்சத்து என அழைக்கப்படுகிற வைட்டமின் டி-ஆனது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, எலும்பு மற்றும் பற்கள் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கைக் கொடுக்கிறது. வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் மட்டுமல்ல தசை இழப்பு ஏற்படுகிறது என்கிறது புதிய ஆய்வு. வயதாக ஆக தசை இழப்பு ஏற்படுவது அனைவருக்கும் பொதுவான பிரச்னை. இது தினசரி வாழ்க்கையை சவாலானதாகவும், கடினமாகவும் மாற்றுகிறது. ஆனால் வைட்டமின் டி குறைபாடானது வயதின் தாக்கத்தோடு தசை இழப்பையும் வேகப்படுத்துகிறது. கால்சிஃபைட் டிஷ்யூ இன்டர்நேஷனல் மற்றும் தசைக்கூட்டு ஆராய்ச்சியானது இதனை விளக்கியுள்ளது. 50 மற்றும் அதற்கும் அதிகமான வயதுடைய 3205 பேரை இந்த ஆய்வுக்கு உட்படுத்தியதில் தசை இழப்புக்கு வைட்டமின் டி குறைபாடு காரணம் என்பது தெரியவந்துள்ளது.
ஆய்வில் தொடக்கத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் ஒருவருக்கு கூட தசையிழப்பு ஏற்படவில்லை. ஆனால் 4 வருடம் கழித்து பார்த்தபோது வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களில் 70% பேருக்கு தசை இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் நோயாளியாக இருப்பது போன்ற பிற காரணிகளையும் ஆராய்ச்சியாளர்கள் கருத்தில் கொண்டனர். ஆய்வில் தொடக்கத்தில் போதுமான ஊட்டச்சத்துடன் இருந்தவர்களைவிட வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சனையானது 78% கண்டறியப்பட்டது.
உடலுக்கு ஏன் வைட்டமின் டி தேவை?
வைட்டமின் டியை சூரிய ஒளி ஊட்டச்சத்து என்றும் அழைப்பதற்கு காரணம், உடல் இந்த சத்தை உருவாக்கும் செயல்முறை தான். மனித உடலானது சூரிய ஒளியில் படும்போது இயற்கையாகவே வைட்டமின் டி சத்தை உருவாக்குகிறது. இருப்பினும், சில உணவுப்பொருட்களிலும் வைட்டமின் டி நிறைந்துள்ளது.
1. காளான்
2. பால்
3. முட்டை
4. சால்மன் மீன்
5. மத்தி மீன்
6. மீன் எண்ணெய்
வைட்டமின் டி எலும்புகளை வலுவாக்குகிறது. மேலும் தசைகளின் வலிமையை அதிகரித்து ஆரோக்கியத்துடன் இருக்க உதவுகிறது.
வயதுக்கு ஏற்ப தசையை பராமரிப்பது எப்படி?
1. வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உண்ணவும்
2. போதுமான கால்சியம் உடலில் சேர்வது அவசியம்
3. சால்மன், சிக்கன் மற்றும் டர்க்கி போன்ற மெல்லிய புரதங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்
4. உடல் வலிமை உடற்பயிற்சி
குறிப்பாக 71 வயதுக்கும் அதிகமானோருக்கு ஒருநாளில் 800 IU வைட்டமின் டி உடலில் சேர்வது அவசியம். அதற்கும் குறைவானோருக்கு 600 IU வைட்டமின் டி தினசரி அவசியம்.
ஆதாரம்: WWW.PUTHIYATHALAIMURAI.COM